அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அழிவு யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் தம்மைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் முன்வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவலக்குரல் எழுப்பியபோது சர்வதேச சமூகம் ஆபத்தில் உதவ முன்வரவில்லை.
மரணத்தருவாயில் இருந்து கொண்டு தமிழ்மக்கள் முன்வைத்த அந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. எனவே எமது பிரச்சினைக்கு நாமே தீர்வுகளைக்கான வேண்டும் என்ற பாடத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் சர்வதேச சமூகம் உதவியை வழங்க வேண்டும் எனவும் அதன்மூலம் மக்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரம் கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகி குடி தண்ணீருக்கும், விவசாயப் பாதிப்புக்கும், இலக்காகி பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டும் என்றும் கூறினார்.