197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
அது தொடர்பில் பணிப்பாளர் தெரிவிக்கையில் ,
யாழ்.போதன வைத்திய சாலைக்கு மாலை 5.25 மணியளவில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் போது அவரது வயிற்றுபகுதியில் இருந்து பெருமளவான இரத்தம் வெளியேறி இருந்தது. சுமார் 5 லீட்டர் இரத்தம் அவருடைய உடலில் இருந்து வெளியேறி இருந்தது.
உடனடியாக அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றப்பட்டு அவருடைய உயிரை காப்பாற்ற மூன்று மணி நேரம் சத்திர சிகிச்சை நிபுணர்கள் போராடினார்கள் அவருக்கு ஈரல் , குடல் பகுதி மற்றும் கீழ் பெரும் நாளங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது கீழ் பெரு நாளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அதிகளவில் இரத்த பெருக்கு ஏற்பட்டது.
சத்திர சிகிச்சையின் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வைத்து மூன்று மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12.20 மணிக்கு உயிரிழந்தார். என்பதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரியும் தனது அறிக்கையில் அதிகளவான இரத்த பெருக்கினால் தான் மரணம் சம்பவித்தது என குறிப்பிட்டு உள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் இன்று காலை வைத்திய சிகிச்சையின் பின்னர் வைத்திய சாலையை விட்டு வெளியேறியுள்ளார். என மேலும் தெரிவித்தார்.
Spread the love