ஆப்கானிஸ்தானின் காபூலின் மேற்குப் பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி , வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 24 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதுடன் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்ற குறித்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. அரசின் துணை தலைமை நிர்வாகியான மொகமது மொஹாகிக் வீட்டின் அருகில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதுஇ இதுகுறித்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த இரண்டு மாதத்தில் நடந்த 3-வது பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ’’அரசு ஊழியர்கள் நிறைந்திருந்த மினி பேருந்தை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.