மருந்து வகைகளின் பயன்கள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆயுர்வேத மருந்துகள் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விளம் பரங்கள் வெளியிடப்படுகின்றன எனவும் இதனால் மக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இயக்குநர் அமித் கேடோச் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. எனவே ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருந்துகள் தொடர்பாக பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட, விளம்பரங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலையில் சர்க்கரை நோயாளிகளுக்காக சந்தையில் ஓர் ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான விளம்பரம் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகிளனை அடுத்து விளம்பர ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்h.
மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடை செய்ய இந்திய விளம்பர தர கவுன்சில் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த கவுன்சில், பத்திரிகை, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் போலி ஆயுர்வேத மருந்து விளம்பரங்கள் குறித்து கண்காணித்து தகவல் அளிக்கும் எனவும் அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.