நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பின் பாதுகாவலர்களான நீதிபதிகளையோ அவரது பாதுகாப்புத் தரப்பினரையோ இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நாட்டின் சாதாரண பிரஜைகளினது பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிப்பதாக கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியனின் மெய்ப்பாதுவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த சம்பவம் தொடர்பில் தனது கடுமையான கண்டணத்தையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் பாரிய திட்டமிடல்கள் இருப்பின் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை இனிமேல் நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுக்க எண்ணும் எவருக்கும் எச்சரிக்கையாக அமைய வேண்டும் எனவும் இதன் மூலம் நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கும் தம் பாதுகாப்பு குறித்து ஒரு நம்பிக்கை பிறக்கும் என்பதுடன் இந்த சம்பவம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளமையால் சர்வதேச ரீதியிலும் இலங்கையின் சட்டம் ஒழுங்கு குறித்து சர்வதேச ரீதியிலும் சிறந்த தோற்றப்பாட்டை உருவாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.