இலங்கையில் எச்.ஐ.வி கிருமிகளினால் பாதிக்கப்பட்டோரில், அதிகமானோர் ஆண்கள் என இலங்கை எயிட்ஸ் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 131 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் 90 பேர் ஆண்கள் எனவும் எயிட்ஸ் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர். சிசிர லியனகே தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 0.0021 சதவீதம் பேர் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த டாக்டர். லியனகே, தெற்காசியாவில் மிகக்குறைவாக எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி யினால் பாதிக்கப்போரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிகிச்சைகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 30 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே போன்று சிறை கைதிகள் மற்றும் முப்படைகள் ஆகியோர் மத்தியில் எச்.ஐ.வி பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படும் அவகாசம் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால், அவ்வாறான நபர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரிசோதனைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள டாக்டர். சிசிர லியனகே, இந்த ஆண்டு முடிவிற்குள் நாடளாவிய ரீதியில் பதினோரு லட்சம் எயிட்ஸ் நோயாளிகளை அடையாளம் காணும் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.