குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு, கூட்டு எதிர்க்கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சட்டத்தரணி ஊடாக இது குறித்து அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் மூன்று மாகாணசபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை சட்டத் திருத்தம் மேற்கொண்டு அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல்களையும் ஒன்றாக நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.