1.7K
தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள யாழ் நல்லூர் கோவிலடியில் நீதிபதி இளஞ்செழியனுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் தணியவில்லை.
நீதித்துறையின் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், சுதந்திரமான நீதித்துறையின் செயற்பாட்டுக்கு விடுக்கப்பட்ட சவால், சட்டம் ஒழுங்கின் சீர்குலைவு, பொது பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு, மனிதாபிமானத்தின் வெளிப்பாடு, இந்த நாட்டின் இருவேறு இனங்களுக்கிடையிலான நல்லுறவின் அடையாளம், மனித உணர்வின் உருக்கமான வெளிப்பாடு, எதனையும் அரசியலாக்கும் நோக்கத்திலான போக்கு போன்ற பல்வேறு தன்மைகளை இந்தத் தாக்குதல் சம்பவம் தொட்டுணர்த்தியிருக்கின்றது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட ஒருவர். அவருடைய கடமையுணர்வும், குற்றவியல் வழக்குகள், மனித உரிமை சார்ந்த வழக்குகள் என்பவற்றை அவர் கையாள்கின்ற நேர்த்தி, அதன் ஊடாக அவரால் அளிக்கப்படுகின்ற தீர்ப்புக்கள் என்பன பலராலும் சிலாகித்து பேசப்படுபவன. முக்கியமான வழக்குகளில் அவர் அளிக்கின்ற தீர்ப்புக்களை அதிரடி தீர்ப்புக்கள் என்றும், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பில் சமூகத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு அவர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள், அதிகாரிகளுக்கு விடுக்கின்ற உத்தரவுகள் என்பவற்றை அதிரடி நடவடிக்கைகள் என்றும் ஊடகங்கள் வர்ணிப்பது வழக்கம்.
அவருடைய நடவடிக்கைகளும் தீர்ப்புக்களும் பட்டிதொட்டியெங்கும் பரவி, சமூகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கின்ற ஒரு செயற்பாடாகத் திகழ்ந்திருக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அவைகள் அமைந்து பலரை குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்திருப்பதைப் பலரும் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளனர்.
இதனால் மக்கள் மத்தி;யில் பிரபல்யம் அடைந்துள்ள அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத் தாக்குதல் ஒரு பேரதிர்ச்சியாகவே சமூகத்தில் பரவியிருந்தது. மிகவும் கண்டிப்பான ஒரு நீதிபதியின் பாதுகாப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது என்றால் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி பொதுவாக எல்லோருடைய மனங்களிலும் எழுந்திருந்தன.
கடமை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நீதிபதி இளஞ்செழியனுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற அவருடைய மெய்ப்பாதுகாவலர்கள் இருவருமே சூட்டுக்காயங்களுக்கு உள்ளாகின்றார்கள். உதவுவதற்கு எவருமே உடனடியாக இல்லாத நிலையில் காயமடைந்த இருவரையும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மெய்ப்பாதுகாவலர்களின்றி தனித்துவிடப்பட்ட நீதிபதியையும் அவருடைய நீதிமன்ற பணியாளராகிய சாரதியையுமே சார்ந்திருந்தது.
அந்த இக்கட்டான அச்சமும் அதிர்ச்சியும் சூழ்ந்த ஒரு சூழலில் அவர்கள் இருவரும் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றார்கள்.
இதற்கு முன்னதாக நல்லூர் கோவிலின் பின்புறத்தில் நாற்சந்தியை வந்தடைந்த நீதிபதியின் கார் தடங்கலின்றி செல்வதற்காக, முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பிரேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர், வீதியில் சென்ற வாகனங்களை நெறிப்படுத்துகின்றார். காரில் இருந்தவாறே முன்னால் நடப்பவற்றை நீதிபதி இளஞ்செழியன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அப்போது வாகனங்களை நெறிப்படுத்திய தனது மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை அவருடைய இடுப்பில் இருந்து ஒது நபர் மிகவும் இலாவகமாக பறித்தெடுப்பதையும், துப்பாக்கி பறிபோகாமல் தடுப்பதற்கு மெய்ப்பாதுகாவலர் போராடுவதையும் அவர் அவதானிக்கின்றார். விபரீதமான ஒரு செயல் நடைபெறுவதைக் கண்டதும் காரில் இருந்து இறங்கிய நீதிபதி இளஞ்செழியன் துப்பாக்கியை ஏனடா பறிக்கின்றாய் விடடா துப்பாக்கியை என கத்திக்கொண்டே அவர்களை நோக்கி விரைகின்றார்.
மனிதாபிமானத்தின் வெளிப்பாடு
அந்த நேரம் கைத்துப்பாக்கிக்காக சந்தேக நபரும், பொலிஸ் சார்ஜன்ட்டும் இழுபறிபட்ட அதேவேளை, துப்பாக்கி வெடிக்கின்றது. குண்டுகள் பறக்கின்றன. ஒருசில நிமிடங்களில் நடந்த இந்தச் சம்பவத்தி;ன்போது வயிற்றில் குண்டடிபட்;ட பொலிஸ் சார்ஜன்ட் நிலத்தில் சரிகின்றார். சந்தேக நபர் சுற்றிலும் துப்பாக்கியினால் சுட்ட வண்ணம் அரை வட்டமாகத் திரும்புகிறார்.
சந்தேக நபரிடமிருந்து சுமார் எட்டடி தூரத்திற்கு அப்போது தான் சென்றிருந்ததாக நீதிபதி இளஞ்செழியனே தெரிவித்திருக்கின்றார்.
துப்பாக்கிப்பிரயோகம் நடைபெறுவதையும், அந்த இடத்தை நோக்கி நீதிபதி திடீரென ஓடிச் செல்வதையும், அவதானித்த காரில் நீதிபதியுடன் காவலுக்கு இருந்த மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர், தனது கைத்துப்பாக்கியை எடுத்து, லோட் செய்த வண்ணம் நீதிபதிக்கு முன்னால் பாய்ந்து, அவர் மீது துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துவிடாதவாறு பாதுகாத்த வண்ணம் சந்தேக நபரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தார். சுமார் ஐந்து நிமிடங்கள் இருவருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக நீதிபதி இளஞ்செழியனின் கூற்றில் இருந்து அறிய முடிகின்றது.
தனக்கு பாதுகாப்புக்குப் பொறுப்பான மெய்ப்பாதுகாவலர் ஒருவரின் கைத்துப்பாக்கியை அவருடைய இடுப்புப் பட்டியில் இருந்து ஒரு சிவிலியன் பறித்தெடுப்பதையும் கண்மூடி திறப்பதற்கிடையில் அதனை அவர் லோட் செய்து சூடு நடத்துவதையும் கண்டதும், அந்த மெய்ப்பாதுகாவலருக்கு ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே நீதிபதி இளஞ்செழியன் அவரை நோக்கி ஓடிச் சென்றார் என்று கருத வேண்டியிருக்கின்றது.
ஆபத்தான ஒரு சம்பவமாக அது இருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமலேயே அவர் அவ்வாறு ஓடிச் சென்றிருக்கின்றார்.
துரதிஸ்டவசமாக அந்த மெய்ப்பாதுகாவலராகிய சரத் பிரேமச்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்து வாய்விட்டு அவர் கதறி அழுததன் மூலம் நீதிபதியினுடைய இந்தச் செயலுக்கான காரணத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
அந்தச் சம்பவத்தில் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகவே அந்த பொலிஸ் சார்ஜன்ட் பிரேமச்சந்திர தனது உயிரிழக்க நேர்ந்தது என்ற சோகம் தாங்க முடியாத நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் வாய்விட்டு கதறி அழுதுள்ளார். அதுமட்டுமல்லாமல், கடுமையான யுத்த மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் மிக மோசமான உயிரச்சறுத்தல்கள் நிலவிய காலம் உட்பட, 15 வருடங்களாக நிழலாக இருந்து தன்னைப் பாதுகாத்த ஒரு மெய்ப்பாதுகாவலனை இழந்துவிட்டோமே என்ற கசப்பான உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தன்னைப் பாதுகாப்பதற்காகவே பிNருமச்சந்திர தனது உயிரைத்தியாகம் செய்திருக்கின்றார் என்ற நன்றி உணர்வில் நீதிபதி இளஞ்செழியன் திக்குமுக்காடியதையே அந்த அழுகையும், பிரேமச்சந்திரவின் குடும்பத்தினரை வணங்கியமையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
மிகவும் கண்டிப்பான நீதிபதி ஒருவரின் உள்ளத்தில் விரவிக்கிடக்கின்ற மனிதாபிமான உணர்வின் வெளிப்பாடாகவே இதனைக் கருத வேண்டியிருக்கின்றது.
யாரைப் பாதுகாக்கின்றார்களோ அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் போது மெய்ப்பாதுகாவலர்களாகப் பணியாற்றுபவர்களே முதலில் பலியாகின்றார்கள். அல்லது அவர்களுடைய உயிரே முதலில் பறிக்கப்படுகின்றது. வன்முறையாளர்களினால் முக்கியஸ்தர்கள் இலக்கு வைத்து படுகொலை செய்யப்பட்ட அனைத்து சம்பவங்களிலும் இநத வகையிலேயே சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.
இருப்பினும் அந்தச் சம்பவங்களில் அந்த மக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டதனால், அவர்களுக்கும், அவர்களுடைய மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையில் நிலைவிய மனிதநேய உறவும், மனிதநேய உணர்வும் வெளிப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது என்றே கூற வேண்டும். ஆநால் நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர்தப்பியதையடுத்து, அந்த மனிதாபிமான உறவின் தன்மை வெளிப்பட்டிருக்கின்றது.
நீதிபதி இளஞ்செழியனின் இந்த மனிதாபிமான உணர்வினதும், மனிதாபிமான உறவினதும் வெளிப்பாடானது, தென்னிலங்கையில் பௌத்த பீடத்தைச் சேர்ந்தவர்களையும் இனவாதிகளையும்கூட உலுப்பியிருக்கின்றது. இனவாத ரீதியிலான அரசியல் பிரசாரங்களில் ஆழ்ந்து போயுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உணர்வு வெளிப்படானது, தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு இனங்களிடையே அடிமட்டத்தில் எத்தகைய அன்னியோந்நிய உறவு நிலை உணர்வுபூர்வமாக நிலவுகின்றது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.
சிங்கள அரசியல்வாதிகளும், அரச தலைவர்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம் என்பன குறித்து வாய்கிழிய பேசுகின்றார்கள். போதிக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அந்த உறவையும் உணர்வையும் வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்படுவதில்லை. அவ்வாறானவர்களின் அறியாமைக் கண்களைத் திறக்கும் ஒரு திறவு கோலாகவே, இந்த உணர்வு வெளிப்பாடு அமைந்திருக்கின்றது. இது இந்த நாட்டுக்கு அவசியமான இன நல்லுறவைப் பேணி வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அது கடினமான காரியமல்ல என்பதையும் பலருக்கும் உணர்த்தியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
அச்சுறுத்தல்
யாழ்ப்பாணத்தைப் பொருத்தமட்டில், யுத்த மோதல்கள் இடம்பெற்ற நீண்ட காலப்பகுதியில் நாட்டின் பிரதான பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. நாட்டின் மறு புறத்தில் என்ன நடக்கின்றது. உலகவோட்டத்தில் என்னென்ன மாறுதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அறியாமலும், அந்த மாறுதல்களுக்கு இயல்பான முறையில் ஆளாகாத வகையிலும் யாழ்ப்பாணம் வேறுபட்ட நிலையில் பின்தங்கியிருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, தென்பகுதிக்கான தரைவழித் தொடர்புகள் அகலத் திறந்துவிடப்பட்டபோது, காட்டு வெள்ளமாகப் பாய்ந்த மாறுதல்களுக்கு அங்குள்ளவர்களால் இயல்பான முறையில் ஈடு கொடுக்க முடியவில்லை.
நவீன வசதிகள் வாய்ப்புக்கள் என்பவற்றினால் ஆட்கொள்ளப்பட்டவர்ளாகவும் அவற்றின் நன்மை தீமைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் அவற்றை அனுபவிக்கக் கூடியவர்களாகவும் அவர்களால் மாற முடியவில்லை. நன்மைகளிலும் பார்க்க தீமையான வழிகளிலேயே அந்த காட்டு வெள்ளம் அவர்களை வழிநடத்தியிருந்தது என்றே கூற வேண்டும். இதன் காரணமாகவே இளைஞர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளிலும் குற்றவியல் சம்பவங்களைச் சார்ந்த நடைமுறை போக்குகளிலும் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதனால் யாழ்ப்பாணத்தின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் அவர்களிடம் இருந்து நழுவிச் செல்ல நேர்ந்தது.
இந்த பகைப்புலத்திலேயே பெண்கள் சிறுமி;களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களும், வன்முறைகளும் கோஸ்டி மோதல்கள், மற்றும் குழு மோதல்கள் வாள்வெட்டு குழுக்களின் எழுச்சி என்பனவும் வேகமாகவும் தீவிரமாகவும் தலையெடுத்திருந்தன.
அவற்றைக் கட்டுப்படுத்தி சீரான வழியில் நடத்திச் செல்வதற்கான சட்டம் ஒழுங்கு முறையாக சமூகம் தழுவிய போக்கில் பேணப்படவில்லை.. இதனால் நீதித்துறைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் பல இடம்பெற்றிருந்தன. இந்த சமூகவிரோதப் போhக்கிற்கு சுயலாப அரசியல் செயற்பாடுகளும் துணையாக அமைந்திருந்தன என்பதை மறுக்க முடியாது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கோரக்கொலைக்கு நீதிகேட்டு சமூகம் பொங்கி எழுந்து பேரணி நடத்தியபோது, இந்த சுயலாப அரசியல் போக்கே யாழ் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு வழிகாட்டியிருந்தது. அதன் பின்னர் இடம்பெற்று வந்த சமூக விரோதச் செயற்பாடுகளில் பலரும் ஊறித் திளைத்த ஒரு போக்கே நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உரமேற்றியிருந்தது என்று அனுமானிக்க வேண்டியிருக்கின்றது.
ஏனெனில் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்க வேண்டியது குடிமக்கள் அனைவரினதும் பொறுப்பாகும். ஆனால் நல்லூர் சம்பவத்தில் முக்கியமான ஒரு நீதிபதியின் மெய்ப்பாதுகாவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு ஒரு குடிமகனுக்குத் துணிச்சலைக் கொடுத்திருந்தைக் காண முடிகின்றது.
இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன? நீதிபதி இளஞ்செழியன்; மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன? அத்தகைய துணிச்சல் எவ்வாறு ஏற்பட்டது? – இது போன்ற வினாக்களுக்கு சரியான உண்மையான விடைகளைத் தேடிக்கண்டு பிடித்து வெளிப்படுத்த வேண்டியது பொலிசாரின் தலையாய கடமையாகும். இது யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை சீராக நிலைநாட்டுவதற்கும் பொதுமக்களின் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்அவசியமாகும்.
ஏனெனில் பொலிசார் கூறுவதைப்போன்று மதுபோதையில் இருந்த ஒருவரே நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் சார்ஜன்ட்டின் இடுப்பில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தாலும், அது சட்டம் ஒழங்கிற்கு எந்த வகையிலும் இலட்சணமான காரியமாக முடியாது.
குடிபோதையில் உள்ள ஒருவர் பட்டப்பகலில்; பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகமாக உள்ள ஒரு நாற்சந்தியில் இவ்வாறு கைத்துப்பாக்கியைப் பறித்தெடுக்க முடியுமாக இருந்தால், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை.
இந்த நிலைமையானது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் அச்சுறுத்தல் மட்டுமல்ல. பொதுவாகவே பொது பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலாகவே கருதப்பட வேண்டும்.
அரசியல் இலாபப் போக்கு
நீதிபதி இளஞ்செழியன் மீது நல்லூர் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத் தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவமானது, தென்னிலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தாங்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு வாய்விட்டு கதறிய நீதிபதி இளஞ்செழியனின் அழுiயானது தென்னிலங்கையில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் கண்டிப்பான ஒரு நீதிபதி என்ற தோற்றத்தைக் கொண்டிருந்த அவர் கல்லுக்குள்ளேயும் ஈரம் இருக்கும் என்ற உண்மையை நிதர்சனமாக்கியிருக்கின்றார்.
ஆயினும் இந்த மனிதாபிமான உணர்வையும் உண்மையான மனிதாபிமான நிலைமையையும் தமது அசியல் நோக்கங்களுக்காக சிலர் தென்னிலங்கையில் பயன்படுத்த முற்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
குறிப்பாக இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் ஆரம்ப காலத்தில் செயற்பட்டிருந்த ஒரு நிலைமையை, நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ நிகழ்வு தனக்கு நினைப்பூட்டியிருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், ஒரு தமிழ் நீதிபதிக்கு ஒரு சிங்கள பொலிஜ் சார்ஜன்ட் தனது உயிரைக் கொடுத்திருக்கின்றார் என்பதையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளதன் மூலம் இனவாதத்தையும் புலிவாதத்தையும் தனது கருத்தில் இழையோடச் செய்திருக்கின்றார்.
நல்லூர் சம்பவமானது, தன்னால் இராணுவ நடவடிக்கையின் மூலம் அழித்தொழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உணர்த்தியிருக்கின்றது என்ற போக்கில் அவருடைய கருத்து அமைந்திருக்கின்றது. ஏனெனில், அவர் சிங்கள பொலிஸ் சார்ஜன்ட் என்றும் தமிழ் நீதிபதி என்றும் இனவாதப் போக்கில் சுட்டிக்காட்டியிருந்தாரே தவிர, தனது மெய்ப்பாதுகாவலருடைய இழப்பை, தனது உறவினர் ஒருவருடைய இழப்பைப் போன்று தாங்க முடியாமல் தவித்த நீதிபதியின் உணர்வு வெளிப்பாடு குறித்து அவர் குறிப்பிடவே இல்லை.
ஒட்டு மொத்தத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, நல்லூர் சூட்டுச்சம்பவத்தின் மூலம் விடுதலைப்புலிகள் தலைதூக்குகின்றார்கள் என்ற நச்சு எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பி, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னை ஆட்சி அதிகாரத்தில் நிறுத்த சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்ற அரசியல் பிரசாரத்தை முன்னெடுப்பாரோ தெரியவில்லை.
Spread the love
4 comments
போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் அதை பற்றி இப்படியொரு குழப்பமான கதையை எழுத்துவது சரியல்ல .பாதுகாப்பு பிரதி அமைசச்சர் கூறிய கருத்தை ஏற்று கொள்வது இப்போதைக்கு உகந்தது
நல்ல பகுப்பாய்வு செய்து, தாக்குதல் உணர்த்தியிருக்கும் பல்வேறு தன்மைகளை வெளிப்படையாக எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்.
மே 2015 இல் ஒரு இளம் மாணவி சிவோலோகநாதன் வித்யாவின் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கடந்த வாரம் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவுக்கு அமைய இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு துணை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு முடிவில் நீதிபதியின் தீர்ப்பு குற்றவாளிகளை பெரிதாக பாதிக்கக்கூடும் என்று எண்ணி நீதிபதியை கொல்ல அல்லது எச்சரிக்க எடுத்த ஒரு முயற்சி போல் தோன்றுகிறது.
இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவருக்கு உயிராபத்து ஏற்பட்டிருந்தால் அதையும் சொல்லியிருப்பான் சிங்கள கொலைகார கூட்டம் துப்பாக்கிதாரி மீது நீதிபதியின் மெய்பாதுகாவலர்கள் நடத்தியதாக்குதலின் போது தவறுதலாக நீதிபதியின் மீது குண்டு பாய்ந்து விட்டது என்று , உடனே சிங்கள கையேந்திபவானுக்கு முன்னால் நிற்க்கும் எச்சிலை பொறுக்கிள் சொல்லியிருப்பார்கள் ஆகா ஒகோ இது எல்லவோ பாதுகாப்பு அமைச்சினதும் சிங்கள காடைத்துறையினதும் ஆக்க பூர்வமான அறிக்கை என்று , கையை கட்டி கண்ணை கட்டி கொலை செய்ததையோ அல்லது இசைப்பிரியாவின் கொலையையோ காணொளிமூலம் காட்டப்பட்டதையே ஏற்றுக்கொள்ள மறுக்கும் காடையர்களிடம் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும் என்று எச்சிலலை பொறுக்கி மறைமுகமாக காதில பூ செருக முயற்ச்சிக்கின்றார், தனக்கு நல்ல தமிழில் எழுதினால் புரியுதாம் , நாய்த் தமிழினில் எழுதினால் மட்டும் தான் புரியுமாம், ராஜன்.
நண்பர் Chris Subramaniam கூறும் கருத்து ஏற்புடையதாகத் தெரியவில்லை. குறித்த சம்பவத்திலும், விசாரணைகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அவசரப்பட்டு விசாரணைகள் குறித்துத் தமது கருத்துக்களையோ அன்றி அனுமானங்களையோ கூறக்கூடாது. மாறாக, ஆய்வாளர்களும், விமர்சகர்களும் தமது ஆய்வுக் கருத்துக்களைக் கூறுவது எந்த வகையில் தவறாகும்?
சம்பவம் குறித்த விசாரணைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமுன்னரேயே, யாழ். பிராந்திய போலீஸ் அத்தியட்சகரும், தேசிய போலீஸ் ஊடகப் பேச்சாளரும் வெளியிட்ட கருத்துக்களை நண்பர் எப்படி ஏற்கின்றாரோ, புரியவே இல்லை!
ஒரு பிரபல தேசிய ஆய்வாளர், ‘போலீஸ் ஊடகப் பேச்சாளரில் தவறு காண முடியாது. அவர் வெளியிட்டது, யாழ். பிராந்திய பொறுப்பாளரின் அறிக்கையையே’, என்று கூறியிருந்தார். இது எவ்வளவு தூரம் சரியானதென்றும் புரியவில்லை. நடந்த சம்பவம் குறித்த, யாழ். பிராந்திய போலீஸ் அத்தியட்சகரின் அறிக்கை முட்டாள்தனமாக இருக்கின்றதென்பது ஒரு சாதாரண பொதுமகனுக்கே புரியும்போது, அறிக்கைக்குப் பொறுப்பேற்கப்போகும் போலீஸ் ஊடகப் பேச்சாளருகுப் புரியாது போனமை விந்தையே? சொன்னதை ஒப்புவிக்க, அவர் என்ன கிளிப் பிள்ளையா? விசாரணைகள் பூரணமாக ஆரம்பிக்கப்படாததொரு நிலையில், போலீஸ் ஊடகப் பேச்சாளர் மட்டும் எப்படி தீர்மானகரமாக அறிக்கையிட முடியுமோ, தெரியவில்லை?
ஆக, நடத்தி முடிக்கப்பட்ட இச் சம்பவத்தின் பின்னால், அதிபலம் வாய்ந்த அரசியல்/ போலீஸ் சதி ஒன்றிருப்பதை மறுக்க முடியாது!