Home இலங்கை அரசியல்க் கருத்துக்கள், அரசியல் எதிர் பார்ப்புக்கள் ஆகியன எம் மக்களிடையே படிகப்பட்டு விட்டனவா -க.வி.விக்னேஸ்வரன்

அரசியல்க் கருத்துக்கள், அரசியல் எதிர் பார்ப்புக்கள் ஆகியன எம் மக்களிடையே படிகப்பட்டு விட்டனவா -க.வி.விக்னேஸ்வரன்

by admin

தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் திருகோணமலையில் மூன்று மாதங்களுக்கு முன் சந்தித்த பின்னர் இன்று தான் கூடியுள்ளோம் என்று நம்புகின்றேன். எமது நோக்குகளும் நடவடிக்கைகளும் எம் மக்கள் சார்பாக மாண்புடன் பயணிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது. நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும் தடைபட்டும் தாமதப்பட்டும் இருக்கும் இந்த நேரத்தில் எமது சிந்தனைகளும் சிரத்தைகளும் சீராக அமைய வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

1.    நாங்கள் மக்கள் இயக்கமாக பரிணாமம் பெற்ற பின் மக்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகள் போதுமானதா?
2.    அரசியல்க் கருத்துக்கள், அரசியல் எதிர் பார்ப்புக்கள் ஆகியன எம் மக்களிடையே படிகப்பட்டு விட்டனவா?
3.    எம்முள் இருக்கும் பல்விதமான கட்சி, மதம், தொழில் சார்ந்த நடைமுறை வேற்றுமைகள் எம் மக்களின் ஒருமித்த அரசியல்ப் பயணம் என்ற ஒரு பொது நிகழ்வின் அடிப்படையில் தேவையான அளவுக்குத் தணிய விடப்பட்டுளனவா?

இவ்வாறான பல கேள்விகள் எம்மிடையே எழுவது இயல்பே.

கட்சி ரீதியாக நாம் செல்லக் கூடிய பயணம் வேறு, இயக்கமாக இயங்கிச் செல்வது வேறு, என்று நான் அபிப்பிராயப்படுகின்றேன். கட்சிகள் அதிகார ரீதியாக மையப்படுத்தப்பட்டவை. கட்சித் தலைவர்கள் தமது கட்டுப்பாடுகளை விதித்து கட்சியைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு உண்டு. அதனால்த் தான் ஒழுங்கமைப்புக்கு அவர்கள் பங்கு மிக்க உபயோகம் அளிக்கின்றது.

ஆனால் இயக்க ரீதியாக நாங்கள் இயங்க ஆரம்பித்ததும் அதில் ஒரு ஜனநாயக சமூகப் பொது உணர்ச்சி மேலோங்குவதைக் காணலாம். அந்த மனோபாவத்தை எம் மக்களிடையே வளர்க்க வேண்டும், வளரவிட வேண்டும் என்று நாம் எண்ணுவதில் பிழையில்லை என்று நம்புகின்றேன்.

அதாவது எம் மக்கள் தமது வருங்காலத்தைப்பற்றிக் கூட்டாச் சிந்தித்து சிறந்த அரசியல் முடிவுகளுக்கு வரவேண்டும் என்றால் அவர்கள் இடையே அரசியல் ரீதியான புரிந்துணர்வை நாம் முதலில் ஏற்படுத்த வேண்டும்.

தற்போது எமது மக்களுக்கிருக்கும் ஒரே அரசியல் ரீதியான புரிந்துணர்வு கட்சி சார்பானதே அல்லது தனித் தலைவர்கள் சார்பானதே. எமது இயக்க ரீதியான பயணமானது எமது தமிழ் மக்களை அரசியல் புரிந்துணர்வின் மூலம் ஐக்கியப்படுத்த வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். அதற்கு அரசியல் அறிவு பரந்து பட்டுப் பரவ வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இதற்கிசைவாக எங்கள் இயக்கம் இயங்கினால் என்ன என்ற எண்ணமே இன்று எம்மை இங்கு கூடி வர வைத்துள்ளது.
மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை அசைக்க முடியாத அரசியல் அஸ்திவாரத்தில் அடி நாட்ட வேண்டும் என்று நாம் அபிப்பிராயப்படுகின்றோம். அதற்கான உங்கள் அமோகமான அரவணைப்பையும் நாம் நாடுகின்றோம்.
அதாவது சந்து பொந்துகளுள் வாழும் எம் மக்கள் மத்தியில் அரசியல் அறிவை எடுத்துச் சென்று அவர்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம்.

வடமாகாணம் பல மாவட்டங்களை உடையது. மாவட்ட ரீதியாக தமிழ் மக்கள் பேரவை மக்களிடையே அரசியல் அறிவைப் பரப்ப ஆவன செய்யலாம் என்று அபிப்பிராயப்படுகின்றோம். முதலில் எமக்குள் சில அரசியல் அடிப்படைகள் அறிவுறுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நாம் அரசியல் யாப்பு பற்றி அரசாங்கத்திற்கு எமது முன்மொழிவுகளை முன் வைத்த போதே அவ்வாறான அடிப்படைகளை அறிவித்து விட்டோம். அவற்றை ஆழச்சிந்தித்து ஆவணமாக அச்சேற்றி எம் மக்கள் மத்தியில் அலசி ஆராய விட வேண்டும். கூட்டங்கள் போட்டு அரசியல் ரீதியாக நாம் எதிர் பார்ப்பனவற்றை அடையாளங் காண முன் வர வேண்டும்.

எமது அரசியல் அபிலாஷைகளை அடையாமல் போனோமானால் காலக்கிரமத்தில் நாம் அனுபவிக்கப் போகும் எமது அவலங்கள் பற்றி மக்களுக்கு அறிவிக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
1.    எதற்காக வடகிழக்கை இணைக்க கோருகின்றோம்?
2.    இணைக்காவிட்டால் நடப்பது என்ன?
3.    எதற்காக சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் யாப்பை வலியுறுத்துகின்றோம்?
4.    அவ்வாறான சமஷ்டி கிடைக்காவிட்டால் ஆவது என்ன?
5.    எதற்காக உள்நாட்டு சுயாட்சியை வலியுறுத்துகின்றோம்?
6.    அது கிடைக்காவிட்டால் நாம் அனுபவிக்கப் போவது என்ன?
7.    எமது பாரம்பரிய பிரதேசங்கள் என்றால் என்ன?
8.    அவற்றை ஏன் வலியுறுத்துகின்றோம்?
9.    அவற்றை அடையாளப்படுத்தி அடைய முனையாவிட்டால் ஆவது என்ன?
10.    எமது அரசியல் எதிர் பார்ப்புக்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிக்குமா?
11.    அப்படியானால் அவற்றைக் கைவிட்டு அரசாங்கம் தருவதைப் பெற்று திருப்தி அடையலாமா?
12.    பெரும்பான்மை இனத்தோரும் சில சிறுபான்மை மதத்தோரும் எமது எதிர் பார்ப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அவை பற்றி நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
13.     எமது எதிர்பார்ப்புக்களை எம் மக்கள் மனதில் படிகப் பட வைக்க நாம் ஒரு சஞ்சிகையை வெளியிட வேண்டுமா? அது மும் மொழிகளிலும் வெளிவர வேண்டுமா?
14.    எமது இயக்கம் பற்றியும் அதன் நோக்குகள் பற்றியும் பூரண அறிவை அம்பலப்படுத்த அச் சஞ்சிகை அதிவிரைவில் அமைபட வேண்டுமா?

இவற்றை விட ஒரு கருத்து வைத்திய கலாநிதி இலக்ஷ்மன் அவர்களால் முன் வைக்கப்பட்டது. அதாவது அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவது பற்றியது. எம்மைப் பொறுத்த வரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியமேதுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏழு மாகாணங்களில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதென்பது அவர்களின் விருப்பம். ஆனால் தயாரிக்கப்படும் எந்த அரசியல் யாப்பிலும் வடக்குக் கிழக்கில் சகல மதங்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பௌத்தத்தை வட கிழக்கில் திணிக்க எந்த அரசாங்கத்திற்கும் தார்மீக உரித்து கிடையாது.

இன்னோரன்ன கேள்விகள் பல எம்மால் விடை காணப்பட வேண்டும். ஆர அமர சிந்தித்தே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் உடனேயே எம் மக்களிடையே அரசியல் அறிவைப் பரப்ப மாவட்டந் தோறும் எமது தொடர்பாடல் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களை வழி நடத்த எமது இயக்கம் ஒரு விசேட அரசியல்க் குழுவை நியமிக்க வேண்டும். இக் குழுவே தொடர்பாடல் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை வலியுறுத்தி வைப்பர்.
தொடர்பாடல் பிரதிநிதி நாம் அமைக்கப் போகும் ஒரு மாவட்டக் குழுவுடன் இணைந்து அரசியல் அறிவு பரவலை அந்தந்த மாவட்டத்தில் இயற்றி வைப்பார். ஒரு சஞ்சிகைக் குழு இவர்களுக்கு இணையனுசரணையாகச் செயற்படும்.
இவை பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகின்றோம். எம்மைத் தடம் பெயர வைக்க தகாத நடவடிக்கைகள் பல இன்று எடுக்கப்பட்டு வருகின்றன. நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறி நஞ்சை எம் மக்கள் மனதில் நடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே எம்மிடையே ஒற்றுமை இருத்தல் அவசியம். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை இன்றேல் எல்லோர்க்குந் தாழ்வு’. இதை நாம் மறத்தல் ஆகாது. கொள்கைகளில் நாங்கள் இறுக்கமாக இருப்போம். எமது நடவடிக்கைகளில் எமது நம்பகத்தன்மையை வலியுறுத்துவோம். ஆனால் எமது மனங்களில் இருக்கும் வன்மத்தைக் களைவோம் என்று கூறி தொடர்ந்து எமது கலந்துரையாடல்களை இன்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி வைக்கின்றேன். அடிமட்ட அரசியல் அறிவுறுத்தல்கள் பற்றி உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளோம். நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran July 31, 2017 - 6:03 pm

“14. எமது இயக்கம் பற்றியும் அதன் நோக்குகள் பற்றியும் பூரண அறிவை அம்பலப்படுத்த அச் சஞ்சிகை அதிவிரைவில் அமைபட வேண்டுமா?”

மேலே கூறப்பட்ட வாக்கியத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன்

“14. எமது இயக்கம் பற்றியும் அதன் தொலைநோக்கு (vision), தொலைநோக்கை அடையத் தேவையான இலக்குகள் (goals), இலக்குகளை அடைய அவசியமான பணிகள் (tasks) பற்றிய பூரண அறிவை அம்பலப்படுத்த அச் சஞ்சிகை அதிவிரைவில் அமைபட வேண்டுமா?”

இத்துடன் தொலைநோக்கு, இலக்குகள் மற்றும் பணிகள் அடிப்படையில் ஒரு வேலை பிரிக்கும் அமைப்பை (work breakdown structure) உருவாக்கி, அதனையடுத்து ஒரு கால அட்டவணையை (project schedule) உருவாக்க வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவை இயங்க வேண்டும். இதனோடு திட்டங்களை திறம்பட (effectively) மற்றும் திறமையாக (efficiently) முகாமைத்துவம் (project management) செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More