குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளை மூடி மறைப்பதற்காக பிரபல ரகர் வீரர் தாஜுடீனின் மரணம் பற்றிய விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மூலம் 13 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நட்டம் பற்றிய விடயங்களை வெறும் 160 மில்லியன் ரூபாவினால் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர் என அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
பிணை முறி மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானத்தை மூடி மறைப்பதற்காக, வாகன விபத்தில் உயிரிழந்த வசீம் தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை மீளவும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
களனி பிரதேச சபை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது பிணை முறி மோசடி பற்றிய உண்மைகள் அம்பலமாவதனை தடுக்கும் நோக்கில் வாகன விபத்தில் உயிரிழந்த தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தமக்கும், தமது தாயாருக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.