குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்
யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவித்திருந்தார்.
இந்த ஊடக சந்திப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்புக்கு வருமாறும் அது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை தாம் பதிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், அத்துடன் பௌத்த தேரர் ஒருவரை அவதூறாக பேசியமை தொடர்பிலும் வாக்கு மூலம் பெற வேண்டும் எனவும் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவ்வழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம், தன்னால், கொழும்புக்கு வர இயலாது உள்ளதாகவும், தேவையெனில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு வருகை தந்து வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளுமாறும் , அதற்கு முடியாவிட்டால் யாழ்ப்பாணம் காவல் நிலையம் வந்து தன்னால் வாக்கு மூலம் வழங்க முடியும் என குற்றபுலனாய்வு பிரிவினருக்கு அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ் காவல்நிலையத்திலுள்ள குற்றத்தடுதடுப்பு பிரிவிற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்தை அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் அவருடன் கலந்து கொண்டிருந்த சக மாகாணசபை உறுப்பினர்களான கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை ஊறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜா ஆகியோரும் அழைக்கப்பட்டு அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.