தலித்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி பசு பாதுகாப்பு குண்டர்கள் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களில் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தலித்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் எழுதியுள்ள கடிதத்தில் முப்படைகளை சேர்ந்த 114 வீரர்கள் ‘எனது பெயரில் இல்லை’ என்ற தலைப்பிட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
அக் கடிதத்தில், தற்போது நிலவி வரும் அச்சுறுத்தல், மிரட்டல், வெறுப்பு மற்றும் அவநம்பிக்கையான சூழலை சுட்டிக் காட்டியுள்ளதோடு, இனிமேலும் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசவிரோதிகள் என்ற பெயரில் பத்திரிக்கையாளர்கள், அறிஞர்கள், ஊடகங்கள், பல்கலைக் கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கும் அதில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.