குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையின் பின்னணியில் பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் இருக்கின்றார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சீன மேர்சன்ட் நிறுவனத்துடன் அண்மையில் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் பின்னணியில் அலோசியஸ் செயற்படுவதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
சீன மேர்சன்ட் நிறுவனத்தை விடவும் லாபமீட்டக்கூடிய நிறுவனங்கள் உடன்படிக்கை கைச்சாத்திட ஆயத்தமாக இருந்த போதிலும், அரசாங்கம் சீன மேர்சன்ட் நிறுவனத்திற்கே அந்த சந்தர்ப்பத்தை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
சீன மேர்சன்ட் நிறுவனம் 99 ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு 1888 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியதாகவும், சீன ஹார்பர் நிறுவனம் 50 ஆண்டுகளில் 3281 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் பின்னணியில் அலோசியஸ் செயற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பிலான சாட்சியங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.