குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் விமானம் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட நபரின் சகோதரர் சிரியாவில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலித் கயாட் என்ற 50 வயது நபரே முக்கிய சூத்திரதாரி எனவும் இவரின் சகோதரர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தந்தையும் மகனும் சிட்னியை சேர்ந்த மற்றுமொரு ஐஎஸ் தீவிரவாதி அஹமட் மேர்கியின் உறவினர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான தகவல்களை சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இடைமறித்து கேட்டவேளையே இந்த சதித்திட்டம் தெரியவந்ததாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
சிட்னியில் பயணிகள் விமானத்தை குண்டுவைத்து தகர்ப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள லெபனானை சேர்ந்த இளைஞர்கள் நால்வரும் ஏற்கனவே சர்வதேச விமானசேவை விமானமொன்றிற்குள் வெடிகுண்டுகளை கொண்டு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விமானச்சேவை விமானத்திற்கு வெடிகுண்டுகளை கொண்டு செல்வதற்கான தங்கள் முதல் திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்தே அவர்கள் மாற்றுத்திட்டதுக்கு முயற்சி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்