குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கத்தை 2020ம் ஆண்டு வரையில் பாதுகாப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொண்டாலும், தொடர்ந்தும் தமது கூட்டணி ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்புக்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்த போதிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அவ்வாறு செய்யாது என குறிப்பிட்டுள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் காரணமாக இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு அபிவிருத்தித் திட்ட நலன்களை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பது தெரியாது எனவும் அவ்வாறு உண்மையென்றால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தனியார் ஊடகங்கள் தமக்கு சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் அடையாளம் எனவும், ஊடகத்தை பக்கச்சார்பின்றி பயன்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.