கிளிநொச்சி அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தினை விரிவுபடுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2010ம் ஆண்டின் பின்னர் அக்கராயனில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டு காலமாக கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்குப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
அக்கராயன் மத்தி, கிழக்குப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல் இடம் பெறவில்லை. இந்நிலையில் அக்கராயன் மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள நீர்த் தாங்கியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்ப வழங்குவதற்காக ரூபா.400 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாக வேலைகள் தொடங்கப்படவில்லை எனவும் இவ்வேலையினை விரைவுபடுத்தி அக்கராயன் கிராம அலுவலர் பிரிவு முழுவதும் குடிநீர் நெருக்கடியினை தீர்த்து வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பின்பகுதியில் உள்ள குடும்பங்கள், அக்கராயன் கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 160 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அக்கராயன் கிராம அலுவலரின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.