கர்நாடகாவின் எரிசக்திதுறை அமைச்சர் சிவகுமாரின் பெங்களுரில் அமைந்துள்ள வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியதாகவும் மேலும், குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து சோதனை செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் ஓகஸ்டு 8ம் திகதி மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இதைதொடர்ந்து, மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்;களை தக்கவைக்கும் வகையில், அவர்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.