குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவினால் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்
சுமார் 800ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மனஸ்தீவு முகாமின் சில பகுதிகளிற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தினை அதிகாரிகள் நிறுத்தியுள்ள நிலையிலேயே அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மனஸ்தீவு முகாமின் பாதுகாப்பு வேலிகளிற்கு வெளியே எங்களிற்கு பாதுகாப்பில்லை அதேவேளை அவுஸ்திரேலியாவின் குடிவரவு துறையினர் முகாமிற்குள் நாங்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் 2013 முதல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்திஸ் பத்திரிகையாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்கள் மனித உரிமைகளிற்காகவும் அகதிகளிற்கு பாதுகாப்பை அளிப்பது என்ற தனது உறுதிமொழியை அவுஸ்திரேலியா நிறைவேற்றவேண்டும் என கோரியுமே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன அந்த வீடியோக்களில் மீண்டும் மின்சாரத்தை வழங்குங்கள்,எங்களை இங்கே கொலைசெய்யாதீர்கள் என அகதிகள் கூச்சலிடுவதை அவதானிக்க முடிகின்றது.