இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலுக்கு ‘சயுரல’ என பெயரிடப்படும் நடவடிக்கை முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
இந்திய கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்காக கட்டப்பட்ட இந்தக் கப்பல் இலங்கை கடற்படையின் தேவைக்கமைய கட்டப்பட்ட முதலாவது கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன கப்பல் கடந்த மாதம் 28 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்த போது கடற்படை பாரம்பரியத்துக்கமைய வரவேற்கப்பட்டது.
இந்த கப்பல் இலங்கை கடற்படையின் 67 ஆண்டு வரலாற்றில் முதற்தடவையாக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட அதி தொழில்நுட்பத்தை கொண்ட கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன போர் கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து, தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. வெளிவாரி தீயணைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவ முடியும். இலகுரக ஹெலிகொப்ரர் இறங்குதளமும் கப்பலில் உள்ளது.