149
கலாநிதி எஸ்.ரகுராம்
தமிழ்ச் சூழலில், ஊடகத்துறை என்பது, அச்சுறுத்தல்களின் களமாகவே அல்லது அழுத்தங்களுக்குள் நீடிக்கும் தொழிற்துறையாகவே இருந்துவருவதை, நீண்ட காலம் நெருக்கடிகள் நிலவிய காலப்பகுதிகளில் ஊடகத்துறையில் இயங்கியவனாக, இன்றைய ஊடகக் கல்வியாளனாக கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. என கலாநிதி எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாபதி அரங்கில் நடைபெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் மற்றும் ஊடகக் கற்கைகள் அலகு இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம் நிலக்சன் ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்தி இருந்தார்.
அதன் போதே அவ்வாறு உரையாற்றினார். மேலும் உரையாற்றுகையில் ,
பத்து வருடங்களுக்கு முன்னர், இயலாமையுடன் விடிந்த விடிகாலைப்பொழுதொன்றில், நிலக்ஷன் கொடூரமாகக் கொல்லப்பட்ட அதே மண்ணில், இனந்தெரியாத சம்பவங்களுக்கும், காரணந்தெரியாத கொலைகளுக்கும், கொலை முயற்சிகளுக்கும் இன்னமும் விடைதராத மாயைச்சூழலுக்குள் அழுந்திக்கொண்டு, ஊடக சுதந்திரம் பற்றி இங்கும், இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு நிலக்ஷன் இழக்கப்பட்ட அதே ஊடகக்கல்விப்புலத்திலிருந்து, அதே கொக்குவிலில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், சுலக்ஷனையும் இழந்த இரத்தச்சுவடுகள் – ஊரும் உலகமும் மட்டுமல்ல, எம்மவர்களும் கூடிக்குலாவும் நல்லாட்சியில் நடைபெறும் விந்தையில் நாம் விறைத்துப் போய் நிற்கிறோம். ஊடகத்துறையில் கால்பதித்த எனது மாணவர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கையில், மிகச் சமீபத்திய சம்பவமொன்றைச் சுட்டிக்காட்டி, ‘இன்னமும் தலைகளுக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது’ என்றேன்.
உண்மை அதுதான், தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால், இந்தத் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திதான். இந்தக் கத்தி பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு முனைப்புக்களிலும் – நேரிலும், மறைவிலுமாக எம்மைக் குறிவைத்துத்தான் இருக்கிறது.
ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் உண்மையில் ஆற்றக்கூடிய பணிகளின் வீச்சும், அந்த வீச்சில் நிகழ்த்தப்படக்கூடிய மாற்றங்களும் கொண்டிருக்கும் பெறுதிகளின் அடிப்படையில், இந்தக் குறிவைப்பு நிகழ்த்தப்படுகிறது. ஒரு நிமலராஜன், ஒரு சிவராம், ஒரு நடேசன், ஒரு சுகிர்தராஜன், ஒரு லசந்த விக்ரமதுங்க எனத் தொடரும் இந்தக் குறிவைப்புக்களில் நிலக்ஷனும் சேர்ந்துகொண்டதை ஒரு நேரடித் தாக்குதல் எனக்கொண்டால், ஒரு சத்தியமூர்த்தியை, ஒரு தவபாலனை, ஒரு இசைப்பிரியாவை இழந்ததும், அமைதிக் காலமொன்றில் சுலக்ஷனை இழந்ததும் – ஊடகத்துறை சார்ந்த அச்சுறுத்தல்களின் நீட்சியாகவே கொள்ளமுடியும்.
உண்மையில் காலத்துக்குக் காலம், தமிழ் ஊடகத்துறை சந்தித்துவந்திருக்கின்ற இத்தகைய மானுட இழப்புக்கள் மாத்திரமல்ல, ஊடக நிறுவனங்கள் குண்டுகள்வைத்து தகர்க்கப்பட்டதும், எரியூட்டப்பட்டதும், துப்பாக்கிதாரிகளின் தாக்குதல்களுக்கு இரையாக்கப்பட்டதும் இந்த அச்சுறுத்தல்களின் மற்றும் சில பரிமாணங்களாகும். ஊடகவியலாளர்கள் சிறைவைக்கப்பட்டதும், அவர்கள் மீது இன்றும் தொடரும் சட்டங்கள்வழியான நெருக்கடிகளும் இந்த அச்சுறுத்தல்களின் மற்றுமொரு வடிவமே.
ஒருவகையில், கொலை என்பது நேரடியான நடவடிக்கையாக மாத்திரம் இருக்கையில், அந்த பௌதிகப் பிரிவிலும் கொடுமையானதாக, பயத்திலும் பீதியிலும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்பது, அந்தக் கண நேரப் பிரிவிலும் கொடுமையானது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அந்த வகையில் தமிழ்ச் சூழலில், ஊடகத்துறை என்பது, அச்சுறுத்தல்களின் களமாகவே அல்லது அழுத்தங்களுக்குள் நீடிக்கும் தொழிற்துறையாகவே இருந்துவருவதை, நீண்ட காலம் நெருக்கடிகள் நிலவிய காலப்பகுதிகளில் ஊடகத்துறையில் இயங்கியவனாக, இன்றைய ஊடகக் கல்வியாளனாக கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இந்த நினைவேந்தலில் கூடியிருக்கும், ஊடகத்துறை சார்ந்த கனவுகளைச் சுமந்து, நம்பிக்கையுடன் காத்திருக்கும் இளம் ஊடகத்துறை மாணவர்களுக்கு, விரிவுரை மண்டபங்களில், இது ஆரோக்கியமான தொழில்துறையென வகைசொல்லும் அதேசமயத்தில், அந்தத் துறையின்வழியான சமூக வகிபங்குகளை எடுத்துக்காட்டும் அதே பொறுப்புணர்வில், இந்தத் தொழிற்துறை எதிர்நோக்கும் சவால்களையும் எடுத்துக்காட்டுவதென்பது, ஒருவகையில் தொழில்தர்மமே என எண்ணுகிறேன்.
ஒரு முழுமையான போர்ப் பதற்றம் தணிந்த அல்லது அதற்கான காரணிகள் அகற்றப்பட்ட சூழல் நிலவுவதாக எத்தகைய உறுதிப்பாடுகளும் நிலவாத, அரசியல், சமூகச் சூழல் ஒன்றுக்குள் நின்றவாறு, ஊடகத்துறைசார் சவால்களை தொழில்வாண்மைக்கு மாத்திரமானதாக நாம் மட்டுப்படுத்திவிடமுடியாது. நிரந்தரமான அரசியல் தீர்வொன்று பெறப்படாதவரையில், நம்மை நாமே ஆளக்கூடிய உரிய அதிகாரங்கள் வழங்கப்படாதவரையில், தமிழர்களுக்கான நீதி என்பது சலுகைகள் சார்ந்ததல்ல என்ற நியாயம் ஏற்றுக்கொள்ளப்படாதவரையில், மேலாதிக்கக் கருத்தியல்கள் அரசியல் உயர்பீடங்களில் மட்டுமன்றி, பெரும்பான்மைச் சமூகத்தின் ஒவ்வொரு துணிக்கைகளிலும் அவை ஊடுபரவியே இருக்கும்.
இங்கு உரிமைக்கான அல்லது நியாயத்துக்கான குரல்கள், உண்மையைச் சொல்லும் வழிகள் என்பன சந்தேகத்துடனும், கிடைக்கின்ற யாதேனும் வழிகள் யாவற்றிலும் அடக்கப்பட்ட சமூகத்தை இன்னமும் அமைதியாக்கிடும் இலக்குடனும் – நீதியையும் கடந்த, சட்டபூர்வற்ற ஒடுக்குமுறைகள் ஆட்சிசெலுத்தும். இத்தகைய வழிகளில்தான், பொதுவில் தமிழ்ச்சமூகத்தின் மீதும், குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதுமான கண்காணிப்பை, நெருக்கடிகளை, கடமையை நிறைவேற்ற அனுமதிக்காத போக்கினை படைகள், காவல்துறை, அரச புலனாய்வுத்துறை, ஆளும் அரசியல்வாதிகள்வழியே தினமும் சந்திக்கவேண்டியுள்ளது.
முற்றுமுழுதான புலனாய்வுக் கண்காணிப்புக்கு மத்தியிலேயே ஊடகவியலாளர்கள் களத்தில் செய்திகளைச் சேகரிப்பதும், அவர்களது ஒவ்வொரு நடமாட்டங்களும் உற்று நோக்கப்படுவதுமாக மாத்திரமன்றி, சட்ட விதிமுறைகளையும் கடந்து எரிச்சலூட்டக்கூடிய விதத்தில் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதுமாக அழுத்தங்கள் தொடர்கின்றன.
ஊடகவியலாளர்களின் வெளிநாட்டுப் பயணங்களிலும் இந்தக் கண்காணிப்பு இன்றும் தொடர்கின்றது. ஒருபுறம் ஊடக சுதந்திரம் பற்றிய உறுதிப்பாடு தொடர்பில் பேசும், அதற்காக முன்னைய ஆட்சியாளர்களுடன் தம்மை ஒப்பிட்டு திருப்திப்படும் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தில், கருத்துச் சுதந்திரத்தின் உண்மையான தாற்பரியங்களும், படைத்தரப்பின் அல்லது காவல்துறையின் அழுத்தங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் ஆளாவதும் புரிந்துகொள்ளப்படாமலிருப்பதாக உணரமுடியவில்லை. மாறாக, இத்தகைய போக்குகளைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம், அவற்றை ஆசிர்வதித்து ஊக்குவிப்பதாகவே, ‘நல்லாட்சி’யின் பெறுபேறுகளைக் கருத வேண்டியுள்ளது.
தெற்கிலுள்ள சக பெரும்பான்மை ஊடகவியலாளர்களுடனும், ஊடக அமைப்புக்களுடனும் கொண்டுள்ள நெருக்கமான உறவும் புரிந்துணர்வுமே பல சமயங்களில், இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான அல்லது அழுத்தங்களைத் தணிப்பதற்கான உபாயமாக தமிழ் ஊடவியலாளர்களுக்கு இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
தற்போதைய ஆளுந்தரப்பு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவிய அழுத்தக்குழுக்களாக இந்த பெரும்பான்மை ஊடகவியலாளர்களும், ஊடக அமைப்புக்களும் இருப்பதே , நெருக்கடிகளைத் தணிப்பதற்கான ஓர் உபாயமாகத் திகழ வாய்ப்பைத் தந்திருப்பதன்றி, வேறல்ல.
அச்சுறுத்தல்களின் வீச்சில் அல்லது வழிமுறைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய உத்தி மாற்றங்களாகத்தான் இவற்றைக் கொள்ளலாமே தவிர, இவற்றை தமிழ் ஊடகத்துறையை அணுகும் அரச அல்லது படைத்தரப்பின் நெகிழ்ச்சிகளாகவோ அல்லது நிலைப்பாட்டு மாற்றங்களாகவோ கருதிவிடமுடியாது.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான பொதுத் தளங்களிலான இராணுவ அணுகுமுறைகளில் இன்றும் அலட்சியத்தையும் மேனிலைப் போக்கையும் சர்வசாதாரணமாகக் காணமுடிகிறது. மிகச் சமீபத்தில்கூட வடமாகாண முதலமைச்சருடனான, இராணுவத்தளபதியின் சந்திப்பில்கூட, அதுவும் ஊடகவியலாளர்கள் பொதுவில் சுயாதீனமாக, உரிமையுடன் உலாவும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திலேயே, ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளை தட்டிச்சென்ற இரணுவ அதிகாரியின் உடல்மொழியும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு அசாதாரணச் சம்பவங்கள் தொடர்பில் களத்தில் பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களின் மீது படைத்தரப்புக் காட்டக்கூடிய வன்மம் நிறைந்த, நட்புறவற்ற அணுகுமுறைகள், செய்தி அறிக்கையிடல்கள் மீதான வழமைக்கு மாறான தீவிர கண்காணிப்பு, தகவல் மூலங்களை அறியவிழையும் சட்டமுறையற்ற தலையீடுகள், இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் விசாரணை அழைப்புக்கள் என பலவற்றையும் இங்கு சுட்டிக்காட்டமுடியும்.
எனவே, ஊடகச்சூழல்சார்ந்த அச்சுறுத்தல் தணிவுப்போக்கென்பது ஒப்பீட்டு ரீதியிலானதாக மாத்திரமே இருக்கிறதேயன்றி, நிரந்தரமானதென்பதற்கான அறிகுறியாக அது அமைந்துவிடவில்லை என்றே கருதமுடிகிறது.
ஊடகத்துறைக்கெதிரான நடத்தைகள் மாத்திரமல்ல, ஊடக சுயாதீனத்தை அங்கீகரிப்பதிலும் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலிருந்து குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இந்த ஆட்சியிலும் ஏற்படுத்தப்படவில்லை. இதனைப் பொதுத்தளத்தில் – தகவல் பெறும் உரிமை, செய்தி ஊடகங்களுக்கான சுயாதீனப் பேரவை போன்ற துறைசார்ந்த சட்டங்கள் உருவாக்கத்தில் அரசாங்கம் காட்டிவருகின்ற அக்கறையின் உண்மைத்தன்மையை அறிவதன் மூலம் இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
இந்தச் சட்டங்கள் இலங்கையில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அவா அல்லது அழுத்தம் இலங்கைக்கு வெளியிலிருந்தும், ஊடகச் செயற்பாட்டாளர்கள் என்ற எண்ணிக்கை மிகக்குறைந்த உள்ளூர் குழுக்களிடமிருந்தும் வந்ததேயன்றி – அரசாங்கம் தன்னியல்பாக அவற்றின்மீது அக்கறை காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சர்வதேச அரங்குகளில், குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான அவைகளிலும் விவாதங்களிலும் – தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதிலிருந்து விலகியிருப்பதற்கான கவனக் கலைப்பான்களாகவே இவற்றை இலங்கை அரசு பரப்புரை செய்துவருவதும் இங்கு நோக்கத்தக்கது.
ஒருவகையில், சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கான அழுத்தங்களைக் குறைப்பதற்கான , சர்வதேச நிகழ்ச்ச்சி நிரலின் ஒருபகுதியாகவும் இச்சட்ட அறிமுகங்களைக் கருதமுடியும். அரசியல் நியமனங்களுக்கான களமாகியிருக்கும் இலங்கை பத்திரிகைப் பேரவை கலைக்கப்படவேண்டும் என்ற ஊடகச் செயற்பாட்டாளர்களின் ஏகோபித்த கோரிக்கை, மைத்திரி அரசினாலும் அலட்சியப்படுத்தப்பட்டு, புதிய நியமனங்களின் மூலம் அது இன்னமும் இயங்கு நிலையில் தக்கவைத்திருக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய, கொழும்பை மையமாகக் கொண்ட தேசிய மட்ட ஊடக அமைப்புக்களில், தமிழ் ஊடகத்துறைக்கான பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பதும், ஒப்புக்குச் சப்பாணியாக, கொழும்பிலிருந்தான, வட- கிழக்கின் ஊடகச் சவால்களை கிஞ்சித்தும் அறிந்திராத, இங்குள்ள அச்சுறுத்தல்கள் பற்றிப் பேசத் திராணியற்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் – தமிழர் பிரதிநிதித்துவத்துக்கான வெளிகள் நிரப்பப்படுவதும் என்றுமே கேள்விக்குள்ளாவதில்லை.
ஒருபுறம், இந்த நிகழ்ச்சிநிரலின் போக்கு, அது சம்பந்தப்பட்ட சக்திகளின் இலக்குகளுக்கானதாக இருக்கையில், ஊடகத்துறை சார்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பற்றிய நீதி விசாரணைகளில் உண்மையான அக்கறை அரசாங்கத்தினால் காட்டப்படவில்லை என்பதையும், புதிய சட்டங்கள் மூலம் நல்லாட்சிக்கு நற்தோற்றமொன்றை வழங்க விரும்பும் சக்திகள், இந்தப் படுகொலை விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தேக்கத்தையும், ஒருவகையிலான அலட்சியத்தையும் அறிக்கைகளில் மாத்திரமே சம்பிரதாயபூர்வமாக கண்டித்துவருவதையும், இங்கு கருத்தூன்றிப் பார்க்கவேண்டியுள்ளது.
இங்கு குறிப்பிடத்தக்க விடயமெனில், தெற்கிலிருந்து எழும் அழுத்தங்களின்பேரில் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்பிலான சில வழக்குகள் சமீப காலங்களில் ஒப்பீட்டளவில் விசாரணை ரீதியான முன்னேற்றத்தைக் கொண்டிருந்தாலும், கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் வழக்குகள் எந்தவித நகர்வுகளையும் சந்திக்காதிருப்பதுமாகும். இது, கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்டவர்களின் பேரிலும் இனரீதியான பாரபட்சம் நிலவுவதான சந்தேகங்களையே மேலும் உறுதிசெய்கிறது.
வெளியிலிருந்தான சவால்கள் ஒருபுறமிருக்க, உள்ளிருந்தே எம்மைச் சிதைக்கவல்ல பலவீனங்களை, வழிதவறுதல்களை நாம் தீவிரமாக கவனத்திற்கொள்ளவும் தலைப்பட்டிருக்கிறோம். இந்தவகையில், தமிழ் ஊடகவியலாளர்களின் வகிபங்கு அல்லது ஊடகங்களின் மீதான சுயபரிசோதனையையும் நாம் அதிகம் கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது பணியிலுள்ள ஊடகவியலாளர்கள் பலருக்கும் ஒரு மூத்த ஊடகவியலாளனாக, ஊடகத்துறைக்கு புதிய இளம் சமூகத்தை பயிற்றுவித்து அனுப்பும் ஒரு ஆசானாக ௲ இந்த சுய பரிசோதனையை மேற்கொள்ளும் தகைமையும் பொறுப்பும் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.
அதன்வழி , முதற்படியாக, இன்றைய தமிழ் ஊடகத்துறை அல்லது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உள்ளார்ந்த சவால்களை, காலத்தின் தேவை கருதிய ஊடகச் செயற்பாட்டுக்களத்தில் நின்று நோக்கவேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்கள், ஊடகச் செயற்பாட்டாளர்களாகச் செயலாற்றுதல் குறித்து தனிப்பட்டவகையில் தொழில்வாண்மை மற்றும் ஊடகத்துறையை ஒரு தொழிற்துறையாகக் கொள்ளும் தளத்தில் மாறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், இன்றைய தமிழ்ச்சூழலில், ஊடகச் செயற்பாடு என்பது மக்கள் நலனை முன்னிறுத்திய, இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திலெடுக்கின்ற, தனிப்பட்ட ஆதாயங்களை இரண்டாம் பட்சமாகக் கருதிக்கொள்கின்ற , ஒரு அர்ப்பணிப்புமிக்க ஊடகத்துறை ஈடுபாட்டை வளர்த்தெடுப்பதற்கு, அவசியமானதெனக் கருதவேண்டியுள்ளது.
ஊடகங்களை வெறுமனே செய்தி அறிக்கையிடுதல்களுக்கான வெறும் வெளியாகக் கொள்ளாமல், அரசியல் ஆசாபாசங்களுக்கான வெளியீட்டுத் தளமாகக் கொள்ளாமல், வணிக நோக்கங்களை முதன்மைப்படுத்தாமல், ஊடக உரிமையாண்மையின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து செல்கின்ற ஆசிரியர்பீடச் சுதந்திரமாக அல்லாது, ஆரோக்கியமான, பொறுப்புமிக்க ஊடகத்துறையைக் கட்டியமைப்பதென்பது இந்தவகையில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகத்துறை என்பது பரப்புரை சார்ந்த ஒரு செயற்பாடாக, போர்க்காலத்தில் தமிழ் ஊடகங்களுக்கு வாய்க்கப்பெற்றிருந்தாலும், ஊடகச் செயற்பாட்டை அல்லது ஊடகச் செயற்பாட்டாளர்களின் வகிபங்கை இன்றைய காலகட்டத்தில் அவ்வாறு வெறுமனே விதித்துரைத்துவிட முடியாதுள்ளது. அவ்வாறானால், இன்று எதிர்பார்த்து நிற்கின்ற ஊடகச் செயற்பாட்டுப் பணிகள் என்பது, அரசியல் மாயைகளிலிருந்து விலகி யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத, ஓர்மப்போக்குக் கொண்ட, கொள்கைவழி செயற்படுகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஊடகச் செயற்பாடுகளையே குறித்து நிற்கின்றது எனலாம்.
ஆனால், இந்த நோக்கங்கங்கள் இழிவளவாகக் கொண்ட ஒரு ஊடகப்பரப்பையே நாம் எமது மண்ணில் காணமுடிகிறது. இளைய தலைமுறை ஊடகவியலாளர்களிடம் ஓரளவாவது காணக்கிடைக்கக்கூடிய இந்த அர்ப்பணிப்புமிக்க ஈடுபாடு, துரதிர்ஷ்டவசமாக, பெரும் ஊடகங்களிடம் காணக்கிடைக்காதது, இந்த ஊடகச் செயற்பாட்டின் பேற்றினை மட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது.
ஊடக மேலாதிக்கத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக , ஊடக உரிமையாண்மையும், அரசியல் நிலைப்பாடுகளும், விளம்பர வருவாய்களும் இருக்கும்பட்சத்தில், ஊடகச் செயற்பாட்டாளர்கள், நிறுவன வரையறைகளுக்குள் அடங்கி நிற்கும் அல்லது அடக்கப்பட்டிருக்கும் போக்கினையே தமிழ் ஊடகப்பரப்பில் காணமுடிகிறது.
இவர்களைப் போன்ற முழுநேர ஊடகவியலாளர்கள் அல்லது தொழிலாற்றும் ஊடகவியலாளர்களை விட சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒப்பீட்டளவிலான தீவிர ஊடகச் செயற்பாட்டுப் போக்கினை இங்கு, தற்காலத்தில் வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இன்னொமொரு சவால், ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பரிமாணத்தை, அதன் வீச்சை தமிழ் ஊடகவியலாளர்கள் இன்னமும் பெருமளவில் புரிந்துகொள்ளாதிருக்கும் நிலைமையாகும்.
ஊடகத்துறை சார்ந்த சமூக மதிப்பீட்டை அல்லது அரச நிர்வாகங்கள், அரசியல்வாதிகள் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீட்டை சீர்தூக்கிப் பார்க்கும் எவரும் – இந்த மதிப்பிறக்கத்தினைப் புரிந்துகொள்ளவே செய்வர். இத்தகைய தொழில்வாண்மை வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், தமிழ் ஊடகத்துறை சந்தைமயப்படுத்தப்படுவதும், செய்திகள் அவற்றின் உண்மையான பெறுதிகளுக்கும் அப்பால் சந்தைப் பொருட்களாகக் கருதப்படுவதுமே , ஊடகத்துறைசார் சமூக மதிப்பீட்டை மிகவலுவாகப் பாதிக்கும் காரணிகளாகக் கொள்ளவேண்டியுள்ளது.
இந்த சந்தை மையமாக்கத்தின் தொடக்கப்புள்ளியாக தமிழில் தொடரிணை செய்தித் தளங்கள், போரிற்குப் பின்னர் சந்தித்த இயங்குநிலை மாற்றமே அமைந்தது. தகவல் தொடர்பாடல் வளர்ச்சி, குறிப்பாக இணையவழித் தொடர்பாடலும் தொடரிணை செய்தித் தளங்களும், போர்க்காலத்தில், களத்தில் நடந்த மானுட அவலங்களை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வதில் மிகப்பெரும் பங்கினை வகித்தன. இலங்கை அரசாங்கம் – சாட்சிகளற்ற யுத்தமொன்றைக் கட்டவிழ்த்துவிட்டபோதும், போரின் மையத்தினை உலகின் தொடர்பாடல் பரப்பிலிருந்து துண்டித்தபோதும், தமிழர் இணையத்தளங்களே போரின் கொடூரத்தை உலகின்கண்முன் வைத்தன.
அத்தகைய வரலாற்றுக் கடமையாற்றிய தமிழ் தொடரிணைச் செய்தித் தளங்கள் பலவும் , இன்று ஊர்வம்பு பேசுவதும், உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுவதும், கீழ்த்தரமான இரசனைகளுக்கு விருந்து வழங்குவதும், தனிப்பட்ட தக்குதல்களுக்கு களமாகியிருப்பதும் என, தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் எதிர்மறைப் பக்கத்தில் தங்கி நிற்பது, தமிழ் ஊடகத்துறையின் ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பாதிப்பது மாத்திரமல்ல, இளம் ஊடகவியலாளர்களிடம் தவறான முன்னுதாரணங்களையும் விதைத்துவிடும் ஆபத்து அதிகரித்துள்ளது.
தமிழ் அச்சு ஊடகங்களில் மிக மிக அருகியே இடம்பெற்றுவந்த இந்த ‘நோய்’, மிகச் சமீபத்தில் எதையும் எவ்வாறும் பேசக்கூடிய அநாமதேயப் பத்திகள்வழியே செய்திப்பத்திரிகைகளிலும் வெளிக்கிளம்புவது, தமிழ் ஊடகப்பரப்பின் ஊடகதர்மத்தினை இன்னமும் கேள்விக்குள்ளாக்குகிறது. நடுநிலைமை, உண்மை, பொறுப்பு என்ற விழுமியங்கள் மிகக் கணிசமாகக் குறைந்துவிட்ட தமிழ் ஊடகத்துறைக்கு ௲ இது, இன்னுமொரு சவாலான போக்கென்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.
ஊடக சுதந்திரம் பற்றிப் பேசவல்ல பலரும் பேசாப்பொருளாக, ஊடகங்களில் சுதந்திரம் – தமிழ் ஊடகப் பரப்பை பல காலமாக ஆக்கிரமித்து வருகிறது.
ஊடகவியலாளருக்கான பாதுகாப்பினைச் சட்ட ஏற்பாடுகளில் தேடும் நாம், அந்த ஊடகவியலாளரின் அடிப்படை உரிமைகளைக்கூட தடுத்து நிற்கிறோம் என்பது உணரப்படாத நிலை, தமிழ் ஊடகங்களில் நிலைபெற்றிருப்பது மிகக் கவலைக்கும் கண்டத்துக்கும் உரிய ஒன்றாகும். தொழில்சார் அமைப்புக்களில் இணையும் உரிமை, தொழிற்சங்கங்களில் இணையும் உரிமை, அடிப்படை வேதனம், பணியாளருக்கான அவசியக் கொடுப்பனவுகள், பணி ஒப்பந்தங்கள், மேலதிக வேலை நேரம், பணியில் பாதுகாப்பு எனப் பல விடயங்கள் இன்னமும் சரிவர, தொழில்சார் நியமங்களுக்கு ஏற்றாற்போல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தமிழ் முழுநேர ஊடகவியலாளர்கள் பலருமே காணப்படுகின்றனர்.
தொழில் வாண்மை விருத்திக்கான வாய்ப்புக்களைப் பெறுவதிலும், அதற்கான வேதனத்துடன் கூடிய அல்லது வேதனமற்ற விடுமுறைகளைப் பெறுவதிலும் இந்த தமிழ் முழுநேர ஊடகவியலாளர்கள் மிகுந்த பிரயாசைக்குள்ளாவது, சமீபத்தில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
இத்தகைய நெருக்கடிகளே, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் – முழுநேர ஊடகவியலாளர்களை விடவும் பகுதி நேர, சுயாதீன ஊடகவியலாளர்கள், பணித்திருப்தியுடன் பணியாற்றக்கூடிய, பொருளாதார ரீதியில் அதிகம் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகத் தொடர்வதற்கான ஏது நிலைகளை உருவாக்கியிருப்பதாகவும் இந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்தச் சவால்களை எதிர்கொண்டு, தமிழ் ஊடகத்துறையை இன்னமும் வலிமையுடன் கட்டமைக்கும்போதே, அது, நிலக்ஷன் போன்று நம்பிக்கையுடனும், மனம் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடனும், அர்ப்பணிப்புக்களுடனும், அறச் சீற்றத்துடனும் ஊடகப்பரப்பிற்குள் நுழையத் தயாராகும் இளந்தமிழர்களுக்கான தகுந்த களமாகும்.
அதற்கான, ஒரு உந்துவிசையாக, நிலக்ஷன் நினைவாக வழங்கப்படக்கூடிய இந்த நினைவுப் பதக்கம், யாழ். பல்கலைக்கழக ஊடகப் பட்டதாரிகளின் முயற்சிகளுக்கும் வினைத்திறனுக்கும் சான்றாகட்டும்.
‘நிலா’ , உன் புன்னகை பூத்த முகத்திற்குள் மறைந்திருக்கும் தளராத துணிவுக்கும், வழிகாட்டலுக்கும் தலைவணங்குகிறோம். உன் கனவுகள் நனவாகட்டும். என உரையாற்றி இருந்தார்.
Spread the love