பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், லல்லு பிரசாத்துடன் கூட்டணியை முறித்து பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, உருவாக்கிய அமைச்சரவையில் பதவியேற்ற 29 பேரில் 22 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள் குறித்து ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.
தேர்தல் ஆணையகத்தில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் அடிப்படையில் அமைச்சர்களின் சொத்து விாரங்கள், குற்றப்பின்னணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி 76 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். அதன்படி மொத்தம் உள்ள 29 அமைச்சர்களில் 22 பேர் மீது கொலை, கொலை முயற்சி,கொள்ளை, திருட்டு, மோசடி, பெண்களுக்கு எதிரான கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
72 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் அமைச்சர் விஜய்குமார் சின்காவின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபா, மற்றொருவரான சுரேஷ்குமாரின் சொத்து மதிப்பு 11 கோடி ரூபா, ஐக்கிய ஜனதா தளம் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபா. 9 அமைச்சர்கள் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.