குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பாவின் பல நாடுகளில் வெப்பநிலை 40 செல்சியசாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்த நாடுகள் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளன.
ஐரோப்பாவின் 11 நாடுகள் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளன.இத்தாலி சுவிட்சர்லாந்து ஹங்கேரி போலந்து உட்பட பல நாடுகள் தங்கள் பிரஜைகளையும் சுற்றுலாப்பயணிகளையும் அதிகரித்து வரும் வெப்பநிலை எச்சரிக்கை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
இதேவேளை பல ஐரோப்பிய நாடுகள் 2003 ற்கு பின்னர் கடும் வெப்பநிலையை சந்திப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவசர மருத்துவ சேவைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் பிரஜைகளை கூடியளவிற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் நீண்;ட தூர பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டடுள்ளன.
இதேவேளை போலந்திலும் ருமேனியாவிலும் இருவர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
இத்தாலி மிகவும் அவசியமான சந்தர்ப்பத்தில் மாத்திரம் தனது மக்களை வெளியில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை போலந்து உட்கட்டமைப்பு கோளாறுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
இதேவேளை இங்கிலாந்தின் பிரயாண வர்த்தக அமைப்பான அப்டாவின் பேச்சாளர் சுற்றுலாப்பயணிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.