155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹன்ரை வடிவா பார்த்து கீழ் நோக்கி சில்லுக்கு சுடுமாறு முபாரக்கு உத்தரவிட்டேன். முபாரக் சுட்டார் என வடமராட்சி கிழக்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள உபபொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன் நீதிமன்றில வாக்குமூலம் அளி த்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களில் ஒருவரான உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன், உயிரிழந்தவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அதன் போது நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினர்.
மணலுக்குள் புதைத்து கஞ்சா கடத்துவதாக தகவல்.
உப பொலிஸ் பரிசோதகர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது,
வாகனமொன்றில் மணலுக்குள் புதைத்து கஞ்சா கடத்தப்படுகின்றது என்று இரகசியத் தகவல் கிடைத்தது. பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்தேன். பொலிஸ் சீருடையுடன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை வருமாறு கூறினேன். பொலிஸ் சீருடையுடன் வந்த முபாரக் என்ற கொன்ஸ்டபிளை அழைத்துக் கொண்டு வல்லிபுரக் கோயில் பிரதான வீதியூடாக நாகர்கோயில்வரை சென்றோம்.’
முபாரக்கின் கையில் ரி-56ரக துப்பாக்கி கொண்டுவரப்பட்டது. அங்கு சென்ற நாம் தகவல் தொடர்பிலான சில கடமைச் செயற்பாடுகளை மேற்கொண்டோம். பின்னர் நாகர்கோயில் – குடத்தனை பிரதான வீதியூடாகச் சென்று வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி நானும் முபாரக்கும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி நின்றோம்.
அப்போது நீல நிறத்திலான ஹன்ரர் ஒன்று வந்தது. அதன் முன்பக்கத்தில் மூன்று பேரும், பின்பக்கத்தில் நான்கு பேரும் இருந்தனர். வீதியின் மத்திக்கு வந்து கையைக் காட்டி வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டினேன்.
ஹன்ரர் என்னை இடிப்பது போல் வந்தது. நான் வீதியோரமாகப் பாய்ந்தேன். ஏன் நிறுத்தாமல் செல்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளை ஸ்ராட் செய்து ஹன்ரரைத் துரத்தினோம்.
ஹன்ரரை நிறுத்துவதற்கு முயன்றோம். பின்னுக்கு இருந்தவர்களை நோக்கி ஹன்ரரை நிறுத்துமாறு கத்தினேன். ஆனால் ஹன்ரரை நிறுத்தவில்லை.
ஹன்ரருக்கு சுட உத்தரவிட்டேன்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டி ஹன்ரருக்கு அருகில் 750 மீற்றர் அண்மையாகச் சென்று ஹன்ரரை நிறுத்துமாறு கூறினேன். நான் நெருங்கிய சமயம் ஹன்ரர் மண் பாதை ஒன்றுக்குள் சடுதியாகத் திரும்பியது. உடனே முபாரக்கை நோக்கி ஹன்ரரை நோக்கி வடிவாகப் பார்த்து ரயரை நோக்கி, கீழ் நோக்கிச் சுடுமாறு கூறினேன். அவர் ஒரு வெடியை ஹன்ரரை நோக்கிச் சுட்டார்.
ஹன்ரர் நிறுத்தப்பட்டு அதில் இருந்தவர்கள் குதித்துப் பற்றைக்குள் ஓடினர். மோட்டார் சைக்கிளை நிறுத்தினோம். முபாரக் அவர்களைச் துரத்திச் சென்றார். நான் ஹன்ரரில் திறப்பு இருக்கின்றதா என்று பார்ப்பதற்காக ஆசனப் பக்கம் சென்றேன். அப்போதுதான் ஹன்ரருக்குக் கீழ் ஒருவர் காயத்துடன் விழுந்து கிடந்தார்.
ஹன்ரருக்குள் காயத்துடன் இருந்தவரை மீட்டோம்.
முபாரக்கை கூட்பிட்ட நான் காயப்பட்டு விழுந்து கிடந்த அவரைத் தூக்கி எமது மோட்டார் சைக்கிளில் ஏற்றி நான் மோட்டார் சைக்கிளைச் செலுத்த அவரை எனக்கும் முபாரக்குக்கும் இடையில் வைத்து அம்பன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அம்புலன்ஸில் ஏற்றினார்கள். எங்களில் ஒருவரை வருமாறு கேட்டனர்.
முபாரக்கை அம்புலன்ஸில் செல்லுமாறு கூறியதுடன் அவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியை நான் வாங்கிக் கொண்டேன். பின்னர் பொலிஸ் நிலையத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கினேன். அதிகாரி என்னைப் பொலிஸ் நிலையம் வருமாறும், பொலிஸ் குழுவை அனுப்புகின்றேன் என்று கூறினார். என நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்தார்.
சடலமாக மகனை பார்த்தேன்.
தாய் வாக்கு மூலம் அளிக்கையில் ,
நான் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வழியில் என்னைக் கண்ட சிலர், எனது மகன் இறந்து விட்டான் என்று தெரிவித்தனர். அதன் பின் மருத்துவமனை சென்று உயிரிழந்த என்னுடைய மகனைப் பார்த்தேன் என வாக்குமூலம் அளித்தார்.
கோயிலுக்கு போய் வந்து சாப்பிடுறேன் என்றவனை சடலமாகவே பார்த்தேன்.
உயிரிழந்தவரின் சகோதரி வாக்குமூலம் அளிக்கையில் ,
எனது சகோதரனிடம் மதியம் 2.30 மணியளவில் சாப்பிடக் கேட்டேன். அப்போது எனது தம்பி காளி கோவிலுக்குப் போய் வந்து சாப்பிடுவதாகக் கூறிச் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் எனது சகோதரன் விபத்தொன்றில் இறந்து விட்டார் என்று அயலவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். நான் மருத்துவமனை சென்று பார்த்தபோதுதான் எனது சகோதரன் மார்பில் குண்டு பட்டு இறந்ததை அறிந்து கொண்டேன் என வாக்கு மூலம் அளித்தார்.
15ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
விசாரணைகளையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதிவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
அத்துடன், சம்பவதினமன்று ஹன்ரர் வாகனத்தில் பயணம் செய்த ஏனைய நால்வரின் விவரங்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். வழக்கை முன்னிட்டு நீதிமன்றில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந் தது. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love