பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நிஷா விக்டரின் மீதான வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
கோப்பாய் காவல்துறையினா மீது கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை காவல்துறையினா கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் , திங்கட்கிழமை மாலை யாழ்.நீதவானின் வாசஸ்தலத்தில் காவல்துறையினர் முற்படுத்தி தடுத்து காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினார்கள். அதற்கு நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிஷா விக்டர் என அழைக்கப்படும் , எஸ்.நிஷாந்தனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் தடுப்பு காவலில் வைத்தே விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள். அவரின் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.