குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கத்தியை பயன்படுத்தி குற்றச்செயல்களை பயன்படுத்துவது லண்டனில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கையை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ பொலிஸ் ஆணையாளர் கிரெசிடா டிக் இதனை தெரிவித்துள்ளார்.சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடுவது நிறுத்தப்பட்டதே குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என மூத்த அதிகாரிகள் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் கத்தியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை 20 வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் இதனை தான் சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சந்கேதநபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடுவதை அதிகரிக்குமாறு தனது உத்தியோகத்தர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உடலில் அணியக்கூடிய வீடியோக்களை பயன்படுத்துமாறு தனது உத்தியோகத்தர்களை ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ள அவர் இது நிறவெறி இனவெறி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உதவக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் குறிப்பிட்ட வீடியோக்களை பயன்படுத்துவது அவர்களிற்கு நம்பிக்கையை அளிக்கும் பொறுப்புக்கூறலிற்கு உதவியாக அமையும் அத்துடன் குற்றவாளிகளே உண்மையை உணர்வதற்கான வாய்ப்பை அது வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை நிற அடிப்படையிலேயே இத்தகைய தேடுதல்கள் இடம்பெறுகின்ற என்ற கருத்து காணப்படுவது குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள மெட்ரோ பொலிஸ் ஆணையாளர் கிரெசிடா டிக் இந்த கருத்து , மாற்றம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தாங்கள் நிச்சயமாக அவ்வாறு செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.