199
சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவிய குற்ற சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணையில் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மூலம் பெறப்பட உள்ளதாக அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மன்றில் தெரிவித்தார்.
குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மற்றும் சந்தேக நபர் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து , வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ,
சுவிஸ் குமாரை ஸ்ரீகஜன் தடுத்து வைத்திருந்தார்.
அக்கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் இரானிடம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை கைது செய்ய வேண்டும் எனவும் , அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாதவாறு விமான நிலைய பொலிசாருக்கு தகவல் வழங்க வேண்டும் என உத்தரவு இட்டவர்.
சுவிஸ் குமார் என்பவரை தேடப்படும் சந்தேக நபராக குறிப்பிட்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியவர். தான் லலித் ஏ ஜெயசிங்க .
அக் கால பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரான ஸ்ரீகஜன் என்பவரே சுவிஸ் குமார் என்பவரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இருந்தார்.
இரண்டு வருடமாக காணொளி தொடர்பில் ஏன் விசாரணை நடத்தவில்லை.
அக்கால பகுதியில் அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ் குமார் என்பவரை பொது மக்கள் பிடித்து வைத்து இருந்த இடத்திற்கு சென்று இருந்தார். அது தொடர்பான காணொளிகள் இணையங்களில் கடந்த இரண்டு வருட காலமாக உள்ளன. அவை பற்றிய குற்றபுலனாய்வு துறையினர் இதுவரை விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
அதேவேளை லலித் ஏ ஜெயசிங்க கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகள் சென்று வந்துள்ளார். தப்பி செல்ல விரும்பி இருந்தால் அவர் தப்பி சென்று இருக்க முடியும். அது மட்டுமின்றி குற்றபுலனாய்வு துறையினர் வாக்கு மூலம் பெற அழைத்த போதிலும் தாம் கைது செய்யப்படலாம் என தெரிந்து இருந்தும் வாக்கு மூலம் அளிக்க சென்று இருந்தார்.
பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
எனவே லலித் ஏ ஜெயசிங்க மீது குற்ற சாட்டுக்கள் இல்லாத காரணத்தால் , அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அரச சட்டவாதி பிணைக்கு ஆட்சேபனை.
அதற்கு கடும் ஆட்சேபனையை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்தார். அதன் போது , புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய 9 அவது எதிரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பதனை விட தப்பி செல்ல வைக்கப்பட்டார். என்பதே சரியான வார்த்தை ஆகும் என நினைக்கிறன்.
குறித்த 9 எதிரி தப்பி செல்ல வைத்தவர் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க எனும் இந்த சந்தேக நபர் என நியாயமான சந்தேகத்தால் , அவர் மாணவி கொலை வழக்கில் தலையீடு செய்ய கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் எனும் காரணத்தால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, வடமாகாணத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
சுவிஸ் குமார் தப்பி செல்ல வைக்கப்பட்டார்.
சுவிஸ் குமார் தப்பி செல்ல வைக்கப்பட்டமைக்கு உதவினார் என குறித்த சந்தேக நபர் மீது நியாயமான சந்தேகம் எழுந்தமையால் , அவரை நீதிமன்றில் முற்படுத்தில் வாக்கு மூலம் பெற்று சாட்சி பதிவுகளை மேற்கொள்ளுமாறு பின்னர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி சட்டமா அதிபர் கடிதம் மூலம் குற்றபுலனாய்வு துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
எனவே இந்த வழக்கில் சந்தேக நபராக உள்ளவர் குற்றபகிர்வு பத்திரம் தாக்க செய்யபப்டுவதற்கு நியாமான சந்தேகம் உள்ளதாலும் , இந்த வழக்கு தொடர்பில் , சாட்சியங்கள் , ஆதாரங்களில் தலையீடு செய்வதற்கு உரிய நியாயமான சந்தேகம் உள்ளமையாலும் இவரை கைது செய்து குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றில் முற்படுத்தி உள்ளனர்.
விளக்கமறியல் காலம் தண்டனை காலம் அல்ல.
அத்துடன் குறித்த சந்தேகநபர் இலங்கை பொலிஸ் தர வரிசையில் , நான்காம் கட்ட அதிகாரிகளுக்குள் ஒருவர் சாட்சியங்களில் தலையீடு இருக்கும். இந்த வழக்கு தொடர்பில் பொலிஸ் சாட்சியங்களும் , சிவில் சாட்சியங்களும் உண்டு. அந்த சாட்சியங்களின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளன.
விளக்கமறியல் காலத்தை தண்டனை காலமாக கருத்தாது , விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் , சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதற்காகவும் , சாட்சி ஆதாரங்களில் தலையீடு செய்யாமல் இருப்பதற்காகவும் ஆனா கால பகுதியாக கருதலாம்.
புதிய சாட்சியங்கள் இணைக்கபப்டவுள்ளன.
கடந்த தவணையின் போது மன்றினால் இடப்பட்ட கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதேவேளை இந்த வழக்கில் மேலும் சாட்சியங்கள் ஆதாரங்கள் சட்டமா அதிபரினால் புதிதாக இணைக்கப்படவுள்ளது.
எனவே வழக்கு விசாரணைகள் தொடர உள்ள நிலையில் , சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என அரச சட்டவாதி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இராஜாங்க அமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் குற்றபுலனாய்வு துறையினர் வாக்கு மூலம் பெறுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரி உள்ளனர்.சபாநாயகரின் அனுமதி கிடைத்ததும் அவர்கள் இருவரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்படும் எனவும் அரச சட்டவாதி தெரிவித்தார்.
சிறையில் உள்ள சிந்தக்கவிடம் வாக்குமூலம் பெற அனுமதி.
இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தாக பண்டாரவிடம் சிறைசாலையில் வாக்கு மூலம் பெற நீதிமன்ற அனுமதியினை குற்ற புலனாய்வு துறையினர் கேட்ட போது நீதவான் அதற்கு அனுமதி அளித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது பொலிஸ் நிலையத்தில் சுமணன் எனும் இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்த குற்ற சாட்டில் சித்திரவதை குற்ற சாட்டுக்காக யாழ்.மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை வித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டா ?
இந்த வழக்கினை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு உண்டா எனும் நியாயமான சந்தேகம் மன்றுக்கு எழுந்துள்ளது.
இந்த மன்றின் நியாயதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற செயல் நடைபெற்றதா ? அல்லது இந்த வழக்குடன் தொடர்புடைய குற்றசெயலின் பாகங்கள் ஏதேனும் இந்த மன்றின் நியாயதிக்கத்திற்குள் நடைபெற்றதா ?என்பது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றினை அடுத்த தவணையில் குற்றபுலனாய்வு துறையினர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு இடுக்கிறேன் என நீதவான் உத்தரவு இட்டார்.
யாழ்.மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாக்கு மூலம் அளிக்க விருப்பம்.
புங்குடுதீவு மாணவி கொலை நடந்த கால பகுதியில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்தவரும் தற்போது சப்பிரகமுவா பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றும் பெரேரா தானாக முன் வந்து சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவியமை தொடர்வான வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க போவதாக மன்றில் அனுமதி கோரினார்.
அதற்கு சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த சாட்சியம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாக்கு மூலத்தை சாட்சியமாக அளிக்க உள்ளார் என தெரிவித்து சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். அத்துடன் சாட்சியம் அளிக்க வந்துள்ளவர் பொலிஸ் சீருடையில் கடமை நேரத்தில் சப்பிரகமுவாவில் இருந்து நீதிமன்றுக்கு வந்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
அதற்கு அரச சட்டவாதி ஆட்சேபனை தெரிவித்து குறித்த சாட்சி தானாக முன்வந்து சாட்சியம் அளிக்க வந்துள்ளார். எனவே அவர் சாட்சியமளிக்க மன்று அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.
வாக்கு மூலம் அளிக்க உரிமை உண்டு.
இந்த வழக்கினை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் இந்த நீதிமன்றுக்கு உண்டு என நீதிமன்றம் முடிவு செய்த பின்னரே இந்த வழக்கு தொடர்பில் வாக்கு மூலங்களை நீதிமன்றம் பதிவு செய்யும்.
இதேவேளை குற்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடகவோ , வாக்கு மூலமாகவே தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அந்த உரிமையை நீதிமன்றம் தடுக்காது. அதேவேளை நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம் அளிக்க வருபவர் இவ்வாறான உடையில் தான் வர வேண்டும் எனும் சட்ட வரையறை இல்லை. எனவே இந்த வழக்கு தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க விரும்புவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும். ஆனாலும் இந்த வழக்கினை விசாரணை செய்வதற்கு நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டு எனும் முடிவினை எட்டிய பின்னரே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படும்.
வைத்திய சிகிச்சை அளிக்க உத்தரவு.
சந்தேக நபருக்கு கழுத்து வலி அதிகமாக உள்ளதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதனால் சந்தேக நபருக்கு உரிய சிகிச்சைகளை சிறைச்சாலை விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்க சிறைச்சாலை அத்தியட்சகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தவணையின் போது சந்தேக நபருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு அது தொடர்பிலான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க உததரவு இட்டு இருந்தேன்.
அந்த அறிக்கை இன்றைய தினம் மன்றில் கையளிக்கபப்டவில்லை. அது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் அடுத்த தவணையின் போது மன்றுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவு இட்டார்.
22ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
அதனை தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.
இரண்டு மணிநேர விசாரணை.
குறித்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூன்று சட்டத்தரணிகளும் கடும் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகஜன் முற்படுத்தப்படவில்லை.
குறித்த வழக்கில் மற்றுமொரு சந்தேக நபரான யாழ்.பொலிஸ் நிலையத்தில் முன்னர் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய சுந்தரேசன் ஸ்ரீகஜன் இன்றைய தினம் மன்றில் முற்படுத்த படவில்லை.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதுடன் குறித்த சந்தேக நபர் பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபருக்கு விஷேட ஒழுங்கு.
குறித்த வழக்கின் பிரதான சந்தேக நபரான லலித் ஏ ஜெயசிங்க இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த பட்ட வேளை குறித்த சந்தேக நபர் நீதிமன்ற காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த வேளை ஏனைய விளக்கமறியல் கைதிகளுடன் நீதிமன்ற சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்படாமல் , நீதிமன்ற சிறை கூடத்திற்கு வெளியில் விசேடமாக கதிரை ஒன்றில் அமர வைக்கப்பட்டு இருந்தார்.
அதேவேளை அவரை இன்றைய தினம் நீதிமன்றில் பார்வையிட வந்திருந்த மூன்று இளைஞர்கள் சிறை சாலை உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் சந்தேகநபரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love