சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவிற்கு சலுகை வழங்கியது தொடர்பானமுறைப்பாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு இன்னும் சில தினங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு மருத்துவம், அறையில் வசதிகள், பணியாட்கள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக அவர் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு 2 கோடி ரூபா லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததனை தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
70 சதவீத பணியை வினய்குமார் முடித்துள்ளதாகவும், இரண்டொரு நாளில் டிஐஜி ரூபா மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விவரம் பெற்றபின், அரசு கொடுத்த ஒருமாத காலகெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து வினய்குமார் தனது விசாரணை அறிக்கையை இன்னும் சில தினங்களுக்குள் அரசிடம் ஒப்படைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை காலம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.