குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் பொலிஸ் சேவையில்தான் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்பதனால் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் மாகாணசபை அமர்வினை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதன்போது சபை தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்ட போது முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் போது சிறுமிகள் தங்களுக்கு இல்லத்தில் கல்வி கற்க மண்டப வசதி செய்து தரவும், நுளம்பு வலை தந்து உதவுமாறும் , கல்வி கற்று முடிந்த பின்னர் வேலை வாய்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளிக்கும் போது இல்லத்திற்கு தேவைப்படும் வசதிகளை எழுந்து மூலம் தந்தால் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அவர் வேலை வாய்ப்பை பொறுத்த வரை பொலிஸ்சேவையில் அதிகளவான வேலை வாய்ப்பு உண்டு எனவும் அதற்கு இணைய முன் வாருங்கள் எனவும் தெரிவித்தார். மேலும் எமது பகுதியில் சட்ட ஒழுங்குகளை நிலைநாட்ட பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.