214
பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்கப்படும் உவர் நீர் அப்பகுதி வயல் நிலங்களில் பாய்ச்சுகின்றார்கள். அதனால் வயல் நிலங்கள் உவராக மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு அதனால் , வயல் நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்ற நிலமில்லாமல் போய்விடும். அதனால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுத்தார்.
ஆய்வுகளை மாத்திரமே மேற்கொண்டார்கள்.
அது தொடர்பில் மற்றுமொரு மாகாண சபை ஆளும்உறுப்பினரான அரியரட்ணம் தெரிவிக்கையில் ,
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டது. அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள சக மாகாண சபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
நான் அந்த இடத்திற்கு சென்று பார்த்து இருந்தேன். அது டோக்கியோ சீமெந்து நிறுவனம் மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அப்பகுதியில் சீமெந்து தயாரிக்க கூடிய கற்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.
தற்போது பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்று விட்டார்கள். பரிசோதனை அறிக்கையின் பிரகாரமே அவர்கள் முடிவெடுப்பார்கள் அந்த இடத்தில் கற்களை அகழ்வதா இல்லையா என அதற்கு இடையில் அடுத்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிக்கின்றார்கள்.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் , கடந்த ஆட்சி காலத்தில் சீமெந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் தற்போது அதற்கு ஆதரவாக செயற்பட தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தற்போது அவ்வாறு செயற்பட காரணம் கையூட்டு பெற்று விட்டார்களா என சந்தேகிக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
Spread the love