இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

காலம் கடத்தும் சந்தர்ப்பம் – செல்வரட்னம் சிறிதரன்

வாள்வெட்டுக் குழுவினரின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள போதிலும் உண்மையாகவே வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்துவிட்டனவா என்பதை உறுதியாக நம்ப முடியாதுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் வடமாகாணத்தை மட்டுமல்லாமல், தென்னிலங்கையிலும் அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சாதாரண சமூக விரோதச் செயற்பாடாகவும் சாதாரண இளைஞர்களின் ஒழுக்கப் பிறழ்வு செயற்பாடு சார்ந்த குற்றச் செயல்களாகவுமே வாள்வெட்டுச் சம்பவங்களை பொலிசார் முதலில்  நோக்கியிருந்தனர்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட நல்லூர் துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பொலிசார் மீது துரத்தி துரத்தி நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமே பொலிஸ் திணைக்களத்தை தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போன்ற நிலைக்குத் தள்ளியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் அங்குள்ள இளைஞர்களை படுகாயப்படுத்தி நேரடியாகப் பாதித்திருந்தன. குழக்களாக இயங்கும் இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த போட்டிச் செயற்பாடுகள் மற்றும் கண்டறியப்படாத பல காரணங்களே இந்த வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணங்களாகக் கருதப்படுகின்றது.
பயங்கரவாதம் குறித்த உருவகம்
அதேநேரத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற துணிகரமான வாள்வெட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் பெரிதும் பீதியடைந்திருந்தார்கள். அடுத்த வாள்வெட்டுச் சம்பவம் எங்கு நடக்கப் போகின்றதோ, யாரை வெட்டிச் சரிக்கப் போகின்றார்களோ, அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்று சாதாரண மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
கொக்குவில் நந்தாவில் பகுதியில் இரண்டு பொலிசார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமானது, சாதாரண பொதுமக்களில் இருந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பக்கம் வாள்வெட்டுக் குழுக்களின் கவனம் திரும்பியிருக்கின்றதே என்று பொலிஸ் திணைக்களம் அச்சமடையவும், வாள்வெட்டுக் குழுக்கள் மீது அக்கறை செலுத்திச் செயற்படவும் தூண்டியிருந்தது.
இதனையடுத்தே அவசர அவசரமாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கான அவசர விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தி;னபோது யாழ்ப்பாணத்தின் சிவில் பாதுகாப்பு நிலைமைகளையும் சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் நேரடியாகக் கண்டறிந்தார். அதற்கு முன்னதாக பொலிசாரின் அறிக்கைகள் பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்ததோர் உருவகத்தை அவர் கொண்டிருந்தார்.
பொலிசார் மீதான வாள்வெட்டுச் சம்பவமும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது உயிரைப் பறிக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட தீவிரமானதொரு துப்பாக்கிப்பிரயோகத் தாக்குதலும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த அவருடைய உருவகத்திற்கு உறுதுணையாக அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பயங்கரவாதம் தலைதூக்கியிருக்கின்றது என்ற உருவகத்தையே பொலிஸ் மா அதிபர் கொண்டிருந்தார் என்பதை யாழ் பிரதேச சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சமூகப் பெரியார்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்திலும், அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலும், அவர் கூறிய கருத்துக்கள் வெளிப்படுத்தியிருந்தன.
அதிரடிப்படை, இராணுவத்தினருடன் இணைந்த கூட்டுக் காவல் நடவடிக்கை 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிவிலியன்கள் சார்ந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பங்களும், வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களும் அங்கு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதையே அடையாளப்படுத்தியிருப்பதாக பொலிசார் கருதியிருந்தனர். அதன் காரணமாகவே எந்தக் காரணத்தைக் கொண்டும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் அப்போது கூறியிருந்தார்.
அத்துடன் நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பொலிசார் அதிரடிப்படையினருடனும், இராணுவத்தினருடனும் இணைந்து கூட்டுக் காவல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதற்குரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல், இத்தகைய கூட்டுச் சுற்றுக்காவல் நடவடிக்கைக்கு அரச தலைவர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் அங்கீகாரமும் பெறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அடவாடித்தனமான சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருப்பதாகத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்த பின்னணியில், ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்தினருடன் சண்டைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகளிடம், பொலிசாரையும் படையினரையும் எதிரிகளாகக் கருதிச் செயற்படுகின்ற மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சண்டையிடுகின்ற மனப்பான்மையில் மாற்றம் காணாத முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, யாழ் பிரதேசத்தில் அரசுக்குத் தெரிந்தும் தெரியாத இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஆயுதங்களும் ஊக்குவிக்கும் அம்சமாக இருக்கின்றன என்ற தொனியில் பொலிஸ் மா அதிபரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஆவா குழுவினரே பொலிசார் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர் என்பதைக் கண்டறிந்த பொலிசார், பொலிசாரைத்தான் தாக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்ட வகையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதல்ல என்பதையும் கண்டறிந்திருக்கின்றார்கள். பொலிசார் மீதான கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து, ஒரு வாரத்துக்கும் சற்று அதிகமான தினங்களிலேயே அந்த வாள்வெட்டு குழுவினரை இனங்கண்டு, அவர்களின் நடமாட்டங்களைப் புலனாய்வு செய்து, அந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கொழும்பில் வைத்து அவர்களுக்கு சற்றும் சந்தேகம் ஏற்படாத வகையில் சாதுரியமாக, பொலிசார் திடீரென கைது செய்துள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்ட முக்கிய சூத்திரதாரியாகிய நிசா விக்டர் என்பவர் பய்ஙகரவாதப் புலனாய்வு பிரிவினருடைய விசாரணையின்போது அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘ஆவா குழுவில் என்னுடன் தர்க்கப்பட்டுக்கொண்டு பிரிந்து சென்று வேறு ஒரு குழுவை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தனு ரொக் என்பவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்துவதற்காகச் சென்றபோது இரண்டு பொலிசார் செல்வதைக் கண்டு, அவர்கள் தங்களைப் பிடிப்பதற்காகவே வந்தனர் எனக் கருதி அவர்கள் இருவரையும் துரத்தித் துரத்தி வாளினால் வெட்டினோம்’ என்று தெதரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களின் பெயர் விபரங்களையும் அவர் தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
நிலைமை இவ்வாறிருக்க அதிகமான குற்றச் செயல்களைப் பயங்கரவாத முலாம் பூசி, முன்னாள் விடுதலைப்புலிகள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கின்றார்கள் அல்லது அவ்வாறு பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்று பொலிசாரும் இராணுவத்தி;னரும் முடிவு செய்துவிடுகின்றார்கள். இதனை ஆவா குழு சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளிலும், யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் அவசர அவசரமாக இராணுவத்தின் துணையை நாடிய செயற்பாட்டிலும் இருந்து தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகளுடனான மோதல்களின்போது, விடுதலைப்புலிகளை எவ்வாறாயினும் அழித்துவிட வேண்டும் என்ற இராணுவ முனைப்புடன் செயற்பட்ட மனப்பாங்கில் இருந்து படைத்தரப்பினரும், பொலிசாரும் இன்னும் விடுபடாத போக்கையே காண முடிகின்றது. இதன் காரணமாகவே,  வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கின்றது, முன்னாள் விடுதலைப்புலிகள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கின்றார்கள் என்ற திடீர் முடிவோடு பொலிசாரும் இராணுவத்தினரும் கருத்துக்களை வெளிப்படுத்த நேர்ந்திருக்கின்றது.
இளைஞர்களின் போக்கு 
படைத்தரப்பினரின் மனப்பாங்கும், குற்றச் செயல்களை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான நடவடிக்கைகளை சரியான திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்காத காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்தில் குற்றறச்செயல்களும் வாள்வெட்டுச் சம்பவங்களும் சட்டத்தையும் ஒழுங்கையும் சவால்களுக்கு உள்ளாக்கத்தக்க வகையிலான மணற்கொள்ளை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிசார் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்காத போக்கு ஒரு புறமிருக்க, குற்றச்செயல்கள் அதிகரித்த சமூகமாக யாழ்ப்பாண சமூகம் மாற்றமடைவதற்கு ஒரு சாரராகிய இளைஞர்களின் நடத்ததைகளும் முக்கிய காரணமாகியிருக்கின்றன.
தமிழர்களின் கலாசாரத் தலைநகராகக் கணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணத்திலேயே பல்வேறு குற்றச் செயல்களும் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் கடத்தல், சிறுமியர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் செயற்பாடுகள் உள்ளிட்ட சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன. குற்றச் செயல்களும் சமூகவிரோதச் செயற்பாடுகளும் கட்டுக்கடங்காமல் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருப்பது என்பது தமிழர்களின் கலாசாரத்தையும் வாழ்க்கைப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் இழிநிலைக்குத் தள்ளிச் செல்வதற்கு வழிசமைத்திருக்கின்றது.
இது கவலைக்குரியது. அதற்கும் அப்பால், ஒரு சாராராகிய இளைஞர்களின் இத்தகைய போக்கு தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்க்கையையும், தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலச் சுபிட்சத்தையும்கூட கேள்விக்கு உள்ளாக்கச் செய்திருக்கின்றது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த நிலைமையானது, தமிழ் மக்கள் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியல் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் ஆணிவேராகிய அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும்கூட ஒரு முக்கிய சவாலாக மாற்றம் பெறத் தொடங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகின்றது.
பிறழ் நடத்தைகள் காரணமாக கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்ற குற்றச்செயல்களையும், சமூகவிரோதச் செயற்பாடுகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளாக உருவகப்படுத்தி, அதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி, இராணுவத்தின் வெளியேற்றம், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், உள்ளிட்ட அவசரமாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளையும் அரசியல் தீர்வு காணும் அவசியத்தையும் புறந்தள்ளி, காலம் கடத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை அரசாங்கத்தி;ற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த நிலைமைகள் துணைபுரியக் கூடும்.
பழைமையும் நவீனமும்
குற்றச் செயல்களையும், சமூகவிரோதச் செயற்பாடுகளையும் வெறுமனே பொலிசாரின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலம் மட்டும் முழுமையாகக் கட்டுப்படுத்தி ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கிவிட முடியாது. யுத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில் சமூகக்கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருந்தன. கிராமங்களிலும் பிரதேசங்களிலும் வாழையடி வாழையாக வாழ்ந்தவர்களே வசித்து வந்தார்கள். அத்துடன் கலை, கலாசாரம் பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பனவும் ஆன்மீக உணர்வுகளுடன் கூடிய மனிதப் பண்பும் மேலோங்கியிருந்தன. அப்போது கல்வியிலும் பொருள் தேட்டத்திலும், சமூக அந்தஸ்து மிக்க உயர்வான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் நோக்கமும் பொதுவாக சமூகத்தில் மேலோங்கியிருந்தன.
ஆனால் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் சமூகக்கட்டுப்பாடுகளையும், தனியார், குடும்பங்கள் மற்றும் சமூக வாழ்க்கை நெறிமுறைகளைத் தகர்த்தெறிந்துவிட்டது. இடப்பெயர்வு காரணமாக ஏற்பட்டிருந்த மனம்போன வழியிலான வாழ்க்கை நடைமுறைகளும், இராணுவ மேலதிக்கம் மிக்க நடைமுறைகள் செலுத்திய மோசமான செல்வாக்கும் தகர்த்தெறியப்பட்ட வாழ்க்கை முறைகளை மீளெழச் செய்வதற்குத் தடைக்கற்களாகிப் போயின.
மீள்குடியேற்றத்தின்போது பிரதேசங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த மனமாற்றங்கள் மாறுபட்ட வாழ்க்கை முறைகள் என்பனவும் பண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவவில்லை. தொலைக்காட்சியின் தாக்கமும், தவிர்க்க முடியாத கைத்தொலைபேசியின் பயன்பாடும், நவீன தொலைதொடர்பு வசதிகளின் ஆதிக்கமும், மக்களுடைய வாழ்க்கையில் வலிமையோடு வந்து நுழைந்த இணையதளப் பயன்பாடும், பாரம்பரிய பண்பாடு, வாழ்க்கை முறைகளுக்கு நேர்மாறான வழிமுறைகளில் சமூகத்தை இட்டுச் சென்றிருக்கின்றன.
இந்த நிலைமையும் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்களை பிறழ் நடத்தைகொண்டவர்களாக்குவதற்குத் தூண்டியிருக்கின்றன என்றே கூற வேண்டும்.
என்ன செய்யலாம்? 
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து அவர் தப்புவதற்கு நல்லூர் முருகனின் அருள் முக்கிய காரணமாய் இருந்தது என தெரிவித்துள்ள  என மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா, வன்முறை கலாசாரத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் நல்வழிக்குத் திரும்புவதற்கு இறைபக்தியே அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளாகிய நாங்களும் இறைவனின் சக்தியை மேலாக நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தி;ன வருடாந்த உற்சவத்தின்போது அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காத்திரமானவை.
‘யுத்தத்தின் பின்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல செயல்களை நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் மத்தியில் வன்முறை கலாசாரமே அதிகரித்துள்ளது. இறைபக்தி இன்மையே இதற்குக் காரணம். இறைபக்தி இல்லாத காரணத்தினால் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இறைபக்தியில் கரிசனைகொண்டு, அதனை வளர்ப்பதன் மூலம், குற்றமற்ற சமூகத்தை உருவாக்க முடியும். குற்றச்செயல்களுக்கு வெறுமனே நீதிமன்றங்களினால் வழங்கப்படுகின்ற தண்டனைகளால் மட்டும் குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் குற்றச் செயல்களை ஓரளவுக்கே கட்டுப்படுத்த முடியும்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையை அவர் சொற்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
‘கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டிய யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பொருள் கடத்தல், கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனை, பாலியல் குற்றச் செயல்கள், விபச்சாரம், வீதிப் போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவது, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைப் புரிதல் போன்ற குற்றச்செயல்களும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுகின்றமை வேதனையளிக்கின்றது.
‘தற்போது மனிதர்களிடத்தில் மனிதநேயம் அற்று, மாறாக வன்முறைகளைத் தூண்டும் மனப்பாங்கும், வன்முறைகளில் ஈடுபடுகின்ற மனோபாவமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. வெறுமனே நீதிமன்றங்களில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களின் மூலம் மட்டும் இவற்றுக்குத் தீர்வு காண முடியாது. குற்றச்செயல்களைப் புரிவோரின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். குரோதங்களுக்குப் பதிலாக அவர்களிடத்தில் மனிதப் பண்புகள் வளர்ந்து மேலோங்க வேண்டும். அதற்கு ஆன்மீக உணர்வு அத்தியாவசியம். அதன் மூலம் குற்றச்செயல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்ற இளைஞர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நீதவான் கணேசராஜா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சமூகத்திலும், இளைஞர்கள் மத்தியிலும் ஆன்மீக உணர்வையும் பண்பாட்டுத் தன்மையையும் நல்ல மனோபாவத்தையும் ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களும், ஆன்மீகவாதிகளும், சமூகப் பெரியார்களும் முன்வர வேண்டும்.
சமூக சீர்திருத்தச் செயற்பாடுகளில் இவர்களுடன் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளின் பங்களிப்பும் மிகமிக அவசியம். சமூக சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கான வேலைத்திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் திட்டமிட்ட வகையில் சமூகத்தில் பரவலாக முன்னெடுப்பதற்கு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அவர்களும் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • Norms (விதிமுறைகளை) = Agreed rules and expectations to guide and direct the behaviour of human beings.

  1. Folkways (a set of norms): Commonly accepted practices (நடைமுறை), customs (வழக்கம்), and habits (பழக்கம்) that make up the fabric of everyday life.

  2. Mores (strict norms of a society): Moral and ethical behaviour (நல்லொழுக்கம்) based on the definitions of right and wrong. Mores apply to everyone, everywhere, all the time.

  3. Taboos (a norm): Banned, barred, forbidden, outlawed, prohibited, proscribed, certain impermissible behaviours (அனுமதிக்க முடியாத நடத்தைகள்).

  4. Laws (சட்டம்): System of rules developed by the government of a country, which regulate what people may and may not do and deals with people who break these rules.

  வழக்கம்: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு நபர் அல்லது மக்கள் ஒரு சமூகத்தில் பொதுவாக செய்யும் சில விஷயங்கள். பழக்கம்: நீங்கள் அடிக்கடி செய்யும் ஏதாவது ஒன்று. Commonly accepted practices: பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள். நல்லொழுக்கம்: எது சரி எது தவறு என்று அனைத்து நேரத்திலும், எல்லா இடங்களிலும், அனைவருக்கும் பொருந்தும், ஒழுக்க நெறிகள்.

  பெற்றோர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், வடகிழக்கு முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொழில் உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பலர் ஒன்றாக சேர்ந்து மேலே கொடுக்கப்பட்ட விதிமுறைகளை புரிந்து, தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்த, உண்மையான விதிமுறைகளை பட்டியலிட்டு, வடகிழக்கு தமிழ் மக்களிடையே தொடர்ச்சியாக விழிப்புணர்வினை ஏற்படுத்தி, விதிமுறைகளை பின்பற்ற அவர்களை தூண்ட வேண்டும். இதற்கு சிறந்த பாடசாலை அதிபர்கள் குழு ஓன்று தலைமை தாங்கி விரைவாக செயல்படுமா?