வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டத்திற்காக நெதர்லாந்து அரசு ஒப்புதல் வழங்கிய பதிநான்காயிரம் மில்லியன் ரூபா நிதி திரும்ப சென்றால்; அதற்கான முழுப்பொறுப்பை முதலமைச்சர் அவர்களே ஏற்கவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா சேமமடுவில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (14.06) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்தவருடம் இந்தப்பிரதேசத்தில்; நடைபெற்றமக்கள் சந்திப்பில் வைத்தியசாலையொன்றின் தேவை பற்றி பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. உண்மையில் இந்த பிரதேசத்தில் வைத்தியசாலையொன்றின் அவசியம் உணரப்பட்டாலும் அதற்கான நிதிஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை இருந்தது. எமது மாகாணத்திற்கான மத்திய அரசின் நிதியொதுக்கீடானது மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட்ட நிலையில் அபிவிருத்தி வேலைகளை செய்வது பிரச்சனையாக இருந்தது. எனினும் வழமைபோல நிதியொதுக்கீடு போதாதென்று மத்திய அரசாங்ககத்தை வசைபாடுவதை தவிர்த்து நிதியை பெறுவதற்கான புதிய மூலஉபாயங்களை பயன்படுத்தி செயற்பட்டோம். அதன்விளைவாக மீள்குடியேற்ற அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் மாகாணத்தின் சுகாதார சேவை விருத்திக்கான நிதியாக ரூபா 5 மில்லியன் கிடைக்கப்பெற்றது. அதனைவைத்தே இந்த வைத்தியசாலை அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. மேலதிக நிதியை சுகாதார அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேமமடு பிரதேசம் புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். ஒருகாலத்தில் விவசாயச் செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகும். 1956-60 காலப்பகுதியில் விவசாய செய்கையை ஊக்கவிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட வகையில் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசமாகும். ஆந்தக்காலத்தில் செல்வம் கொழிக்கும் பூமியாக இந்தப்பகுதி இருந்தவந்துள்ளது. எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் மக்கள் இடம்பெயர நேரிட்டது. தற்போது மக்கள் மீளகுடியேறிவரும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்தே இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
இதேபோன்று வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பொது வைத்தியசாலைகளில் விசேட வைத்திய அலகுகளை நிர்மாணிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் மத்திய அரசினூடாக பதிநான்காயிரம் மில்லியன் ரூபா நிதியை வழங்க முன்வந்துள்ளது. இந்த பெரும்தொகை நிதியை பெற்றுக்கொள்வதற்கு எனக்கு இந்த மாகாணத்தில் யாரும் வழிகாட்டவுமில்லை, அதற்காக பாராட்டவும் இல்லை. மத்திய சுகாதார அமைச்சினால் எமது மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்காணாமல் உள்ளது. அவர்கள் நாட்டின் ஏனைய எட்டு மாகாணங்களைப்போலவே எம்மையும் பார்க்கின்றார்கள். எனவேதான் மத்திய சுகாதார அமைச்சிடம் பேசி அவர்களின் அனுமதியுடன் வெளிநாட்டு நிதிவழங்குனர்களிடமிருந்தும் இவ்வாறான நிதியுதவிகளை பெற்று இந்த மாகாணத்தின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்ய செயற்பட்டு வந்தேன்;. இவ்வாறாக செயற்படும் என்னைப்போன்றவர்கள் மீது கேட்பார் கதைகேட்டு பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியில் துரத்துவதற்கே ஆர்வமாக செயற்படுகின்றார்கள் என்றார்.
வவுனியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநதிகள், பொதமக்களென பலரும் கலந்துகொண்டனர்.