முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி உள்ளார். சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட, சுப்ரீம் செட் என்னும் செய்மதித் திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
சுப்ரீம் செட் தொழில்நுட்பக் குழுவின் பிரதம பொறியியலாளராக ரோஹித ராஜபக்ஸ கடமையாற்றியுள்ளார். இதேவேளை, நாளைய தினம் மஹிந்தவின் மற்றுமொரு புதல்வரான யோசித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி சிராந்தி ராஜபக்ச குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார்:-
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலை ஆகியுள்ளார்.
சிராந்தி தலைமையிலலான, சிரிலிய சவிய என்னும் அமைப்பிற்கு சொந்தமான வாகனமொன்று தாஜூடீன் கொலையின் போது பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் சிராந்தி ராஜபக்ஸ, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக சிராந்தி ராஜபக்ஸ சற்று முன்னர் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.