நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 127வது நாளாகவும் கதிராமங்கலத்தில் 88வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. விவசாயத்துக்கு பாதகம் விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்பதனால் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று கதிராமங்கலத்தில் உள்ள வயல்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய்கள் பதித்து கச்சா எண்ணை எடுத்து வருகின்றது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன எனத் தெரிவித்து ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலம் கிராம பொதுமக்கள் தொடர்ந்து 88வது நாளாக பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சுதந்திர தின விழாவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் ஒட்டுமொத்த நீர் வளம், நில வளம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை மூடிவிட்டு உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என கிராமசபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comment
முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் இன்னும் முடிவடையவில்லை ( காணாமல் போனோர்)… அப் பிரச்சினைகளில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை இன்னும் சற்று கூட்டினால் ஆறுதல்…