குவாம் தீவு மீதான தாக்குதல் திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்- உன் தெரிவித்துள்ளார். வடகொரியா அண்மையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தமையை தொடர்ந்து அதற்கு பதிலடியாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை வீசி அழிப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலைய அடுத்து தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தாங்கள் போரை விரும்பவில்லை எனவும் வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்- உன் கடந்த திங்கட்கிழமை சிரேஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன்போது குவாம் தீவு தாக்குதல் தொடர்பான வியூகங்களை அவரிடம் முப்படை தளபதிகள் விவரித்ததனைத் தொடர்ந்து அமெரிக்கா அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை குவாம் தீவு மீதான தாக்குதல் திட்டம் நிறுத்தி வைக்கப்படும்ட எனவும் தெரிவித்துள்ளார்.