குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தகால போர் காரணமாக 2009 ஆம் ஆண்டு தற்காலிகமாக மூடப்பட்டு போதியளவு மக்கள் மீளக் குடியேறாமையினால் இது வரை ஆரம்பிக்கப்படாதுள்ள பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆராய்ந்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் தற்காலிகமாக பூட்டப்பட்ட கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் பல்லவராயன்கட்டு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, தம்பிராய் அ.த.க.பாடசாலை ,கௌதாரிமுனை அ.த.க.பாடசாலை, பொன்னாவெளி சைவபிரகாச வித்தியாசாலை, அத்தாய் முத்துக்குமாரிசாமி வித்தியாசாலை, செட்டியாக்குறிச்சி அ.த.க. பாடசாலை என்பனவற்றை மீளவும் ஆரம்பிக்கும் வகையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீளவும் இந்தப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் வகையில் கள நிலைமைகளை ஆராயும் பொருட்டு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி தர்மரத்தினம், ஆகியோர் கிளி/தம்பிராய் அ.த.க .பாடசாலை, கௌதாரிமுளை, பல்லவராயன்கட்டு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தற்போது வாழ்கின்ற மக்களுடன் கலந்துரையாடியுள்ளனா்.
இதன் போது பல்லவராயன் இந்து தமிழ் கலவன் வித்தியாசாலை, தம்பிராய் அ.த.க. பாடசாலை ஆகியவற்றை ஆரம்பிக்கவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நான்கு பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் மக்கள் தொகை மிக மிக குறைவாக காணப்படுவதனால் இந்த பிரதேசங்களை சேர்ந்த மாணவா்கள் அயல் பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனா் எனவும் ஆனால் அந்த அயல் பாடசாலைகளிலும் மாணவா்களின் எண்ணிக்கை நூறிலும் குறைவாக இருப்பதனால் இந்தப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் சாத்தியப்பாடுகள் தற்போதைக்கு இல்லை எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் தெரிவித்தார்.
அத்தோடு ஆரம்பிக்கவுள்ள இரண்டு பாடசாலைகளிலும் முதலில் தரம் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக கொண்டு செல்வதனை தவிர வேறு வழியில்லை என்றும் அதற்கான உட்கட்டுமானங்களை கொண்டுவருவதில் நெருக்கடி உள்ளது எனவும் அவா் மேலும் குறிப்பிட்டார்