தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை அறிக்கை 7 மாதத்தில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டத்தின் இறுதி கட்டத்தில் வன்முறை ஏற்பட்டதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி மேற்கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைத்தது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் ஒரு நாளுக்கு 5 பேர் என்ற வீதத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர்h.
மேலும் இந்த போராட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் புகைப்படங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.