2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்ற மக்களுக்கு மாற்று பயிர்ச் செய்கைகளை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது, வடக்கில் புகையிலை உற்பத்தி தொடர்பில் அரச அதிகாரிகள் தரப்பில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவரும் நிலையில், தம்புள்ளை பகுதியில் ஏற்கனவே நெல் மற்றும் உப உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்ட நிலங்கள் தற்போது புகையிலை உற்பத்திக்கு மாற்றப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.
இதனை எந்த வகையில் நியாயமானதாக ஏற்றுக் கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இம்முறை யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில,; அரசின் கொள்கைக்கு ஏற்ப இலங்கையில் புகையிலையைத் தடை செய்யும் நிலைப்பாட்டுக்கு அமைவாக புகையிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற வடக்கின் விவசாய மக்களுக்கு அரச அதிகாரிகள், மேற்படி உற்பத்திகளை நிறுத்தும் வகையிலான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்
விவசாயிகள் புகையிலை உற்பத்தியை நிறுத்தினால், அதற்கான மாற்றுப் பயிர்ச் செய்கையாக ஊக்குவிக்கப்படக்கூடிய பயிர்ச் செய்கைகள் யாவை என்பது தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது யாழ் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப உணவுப் பயிர்களையே மேற்படி புகையிலை உற்பத்தியாளர்களும் மேற்கொள்ள முடியுமென்றே அதற்கான பதில் விவசாய அமைச்சு தரப்பில் கூறப்பட்டது.
எனினும் வடக்கில் எமது மண் வளத்தை ஆராய்ந்து, தற்போதைய உலகச் சந்தையின் கேள்விகளுக்கு பொருத்தமான, பொருளாதார ரீதியில் அதிகம் பெறுமதிவாய்ந்த பயிர்களை அறிமுகஞ் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.