164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார்.
வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு கேள்வி எழுப்பினார்.
சொந்த மாவட்டத்தில் பணியாற்ற தயாரா ?
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
இன்று யுத்தம் இல்ல ஆனாலும் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அவர்கள் தயாரில்லை வடமாகாணத்தில் தற்போது சிங்கள வைத்தியர்கள் கடமையாற்ற வருகின்றனர். ஆனால் இங்குள்ளவர் வெளிமாவட்டங்களை நோக்கி செல்கின்றனர்.
தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா?
வடக்கில் கிராமப்புறங்களில் உள்ள வைத்திய சாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. சில வைத்திய சாலைகளில் கிழமைக்கு ஒரு நாளே வைத்தியர் செல்லும் நிலைமை உண்டு , அவ்வாறு எனில் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கிழமைக்கு ஒரு தடவையா சுகவீனம் ஏற்படுகின்றது.
எனவே வைத்தியர் , தாதியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடல் நீரை நன்னீர் ஆக்கினால் மீன் இனம் அழியாது.
அதேவேளை நெடுந்தீவில் கடல் நீரை நன்னீர் ஆக்கி நெடுந்தீவில் குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கடல் நீரை நன்னீர் ஆக்கினால் மீனினங்கள் அழியும் என சொல்கின்றனர். அப்படியாயின் நெடுந்தீவில் மீன் இனங்கள் அழிந்திருக்க வேண்டுமே. அவ்வாறு மீன் இனம் அழிந்திருந்தால் எவ்வாறு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ஊடுறுவி மீன் பிடிக்க முடியும் ? எனவே கடல்நீரை நன்னீர் ஆக்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஊடக தர்மத்தை பேணுங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் , வசதிகள் தொடர்பில் எழுதாத ஊடகங்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு சிறு சலுகைகள் கொடுத்தாலும் அதை பெரிதுபடுத்தி எழுதுகின்றன.
ஊடகங்கள் தங்கள் கடமைகளை செய்யுங்கள். எம்மை விமர்சியுங்கள். ஆனால் உண்மைக்கு புறம்பாக எழுதாதீர்கள். மறுப்பு தந்தால் மறுப்பை போடுங்கள். சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பந்தி பந்தியாக எழுதினாலும் இறுதியில் இரண்டு வரியிலாவது அது தொடர்பில் சிவாஜிலிங்கத்தின் கருத்தை கேட்டு அதனையும் பிரசுரியுங்கள். ஊடக தர்மத்தை பேணுங்கள் என தெரிவித்தார்.
Spread the love