மூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பற்காக கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனது கல்விச் சான்றிதழ்களில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றக்கோரி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் எனினும் கல்வித் துறை அதிகாரிகள் பெண்ணாக உள்ள தனது பெயரை ஆணாக மாற்றித்தர மறுக்கின்றனர் எனவும் எனவே எனது கல்வி சான்றிதழ்களில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித்தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந் தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களில் உள்ள பெயரை மாற்றிக் கொடுக்க பாடசாலை கல்வித் துறை, சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங் களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீதிபதி, இந்தியா வில் 20 லட்சத்துக்கும் அதிகமான மூன்றாம் பாலினத்தவர்கள் ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின் றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு மாநிலங்களைவையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமையை பாதுகாக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டும் இன்னும் சட்டமாக்கப்படவில்லை.
2 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சட்ட மசோதாவை மக்களவையில் கிடப்பில் வைத்திருக்க முடியுமா எனவும் ஏன் 3-ம் பாலினத்தவர்களுக்காக பிரத்யேகமாக கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இதர சமூக பலன்களை வழங்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கில் மத்திய சட்டத்துறை, மத்திய சுகாதாரத்துறை, மத்திய சமூக நலத்துறை ஆகியோரையும் எதிர் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.