ராஜீவ் படுகொலை வழக்கின் தண்டனைக் கைதி முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்துகிறார்:-
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையிலும் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை என்றும் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும் முருகன் சிறைத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை முருகன் நேற்றைய தினம் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார். கடந்த ஜூலை 26ம் திகதி முதல் முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்பட்டநிலையில் இன்று காலை முதல் முருகன் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.