தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அக் கைதிகள் விடுவிக்கப்படுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடாகும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இக் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில் அவர்கள் நியாயாமான முறையில் நடத்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
வவுனியா நீதி மன்றத்தில் நடைபெற்று வருகின்ற இக் கைதிகள் தொடர்பிலான வழக்குகள் முடிவுக்கு வரவுள்ள தருவாயில், அவ் வழக்குகளை வேறொரு நீதி மன்றத்திற்கு மாற்ற நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மேற்படி உண்ணாவிரத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேற்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரையில் அவர்கள் நியாயாமான வகையில் நடத்தப்பட வேண்டும் என நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலை தொடர்பில் அரசு உடனடி அவதானங்களைச் செலுத்தி, இக் கைதிகளுக்கு உரிய நியாயம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அரசை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது