இலங்கை மற்றும் மேற்கிந்தீவுகள் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் பெரிய அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடாத நிலையில் 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது.
இதனால் பாகிஸ்தான் அணியின் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட ஐ.சி.சி. சம்மதித்துள்ளது.
இந்த ஆட்டங்கள் லாகூரில் பலத்த பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே மாதத்தில் இலங்கை அணி லாகூரில் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி நவம்பர் மாத கடைசியில் பாகிஸ்தான் சென்று மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.