173
அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சே முடிவெடுக்க வேண்டும் எனவும் , அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாட உள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அனுராத புர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்து உள்ளார்கள். என்னுடைய அமைச்சின் ஊடாக அதற்கு முடிவெடுக்க முடியாது. நீதி அமைச்சின் ஊடாகவே முடிவெடுக்க வேண்டும்.
அது தொடர்பில் பல தடவைகள் நான் நீதி அமைச்சுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் எனக்கு அதிகாரம் இருந்து இருந்தால் , நான் நிச்சயமாக அதற்கு நடவடிக்கை எடுத்து இருப்பேன்.
சட்டமா அதிபருடன் இது தொடர்பில் நான் கலந்துரையாட உள்ளேன். அதன் பின்னர் அரசியல் கைதிகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கிறேன். என தெரிவித்தார்.
பொருத்து வீடு தொடர்பில் கருத்து கூற முடியாது.
பொருத்து வீடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையினால் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அது தொடர்பில் பின்னர் முடிவெடுக்கப்படும்.
வடமாகாண சபையில் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
தமிழ் அரசியலில் ஒற்றுமை இல்லை. பல வருடங்களாக இந்த நிலமை காணப்படுகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும். மாகாண சபையில் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
நல்லாட்சி அரசாங்கம் தண்டனை வழங்கும்.
பிழையை செய்பவர்களுக்கு தண்டனை வழக்கும் அரசாங்கமே நல்லாட்சி அரசாங்கம். தவறிழைத்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களின் அமைச்சு பதவிகளே பறி போனது. நான் தவறிழைத்தாலும் அதே எனக்கும் நடக்கும்.
ஆனால் இந்த குற்ற சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்க ப்படவில்லை. வாய் பேச்சால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சு பதவிகள் பறிபோனது. அவர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் நீதிமன்றினால் நிரூபிக்கபப்டுமானால் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பில் கூட கட்சியின் தலைவர் முடிவெடுப்பார்.
வருட இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும்.
வடக்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இராணுவத்தினர் குடியேறியுள்ள தனியார் காணிகளை இந்த வருட மார்கழி மாதத்திற்கு முன்னர் இராணுவத்தினர் கையளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த விடயத்தில் இராணுவத்தினர் எம்முடன் ஒத்துழைக்கின்றது. என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
Spread the love