குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு வெளிநாட்டு சேவைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை புத்தசாசன அமைச்சராக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
2ஆம் இணைப்பு – விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டது – Aug 23, 2017 @ 06:32
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்கள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி விஜயதாச ராஜபக்ஸவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலகவும் கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக, அரசின் கொள்கைகளை விமர்சித்துக் கொண்டிருப்பதன் காரணமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜயதாச ராஜபக்ஸ இன்று பதவி விலக உள்ளார் – புதிய நீதி அமைச்சராக தலதா அதுகோரல ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதவிவிலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம் பதவி விலக விரும்புவதாக விஜயதாச ராஜபக்ஸ, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புதிய நீதி அமைச்சராக தலதா அதுகோரல நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் தமக்கு இதுவரையில் அவ்வாறு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.