யாழில் காவல்துறையினரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ம் திகதி வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கோப்பாய் காவல்துறையினர் இருவர் மீது ஆவாக் குழுவைச் சேர்ந்த நபர்கள் சாரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
வாள்வெட்டிற்கு இலக்காகிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பயன்படுத்திய வாள், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் மீட்கப்பட்ட வாள்கள் மற்றும், மோட்டார் சைக்கிள்களுடன் 7 சந்தேக நபர்களும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையிலேயே நீதீமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நேற்றையதினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த இருந்தபோதிலும், அவர்களை அடையாள அணி வகுப்பிற்குட்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது