கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் பெரியபரந்தன் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டமை தொடா்பில் மீள்குடியேற்ற அமைச்சருக்கு பெரியபரந்தன் கிராம அ பிவிருத்திச் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மேற்படி கிராம அபிவிருத்திச் சங்கத்தினராகிய நாம் மக்கள் சார்பாக தெரியப்படுத்துவது எமது கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை நிரந்தர வீடு கிடைக்காது தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவம் , வலுவிழந்தோர் குடும்பங்கள் பெற்றோரை இழந்து தனிமையில் வாழும் பிள்ளைகளின் கும்பங்களுமாக பலா் காணப்படுகின்றனா். இவ்வாறு பல குடும்பங்கள் வாழ்ந்து வரும் கிராமத்தில் புள்ளியடிப்படையில் 16 குடும்பங்கள் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனா். இது எமக்கும் 16 குடும்பங்களுக்கும் மிகவும் மகிழச்சியளித்தது.
பயனாளிகளான 16 குடும்பங்களின் காணி ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு பல ஒன்று கூடல்களை நடத்தி, நீங்கள் அனைவரும் அத்திவாரம் வெட்டி அத்திவார கல் மணல், என்பன கொள்வனவு செய்த பின்னரே முதற்கட்ட பணம் வழங்குவோம் எனவே உடனடியாக இவ்வேலைகளை செய்யுங்கள் நாம் இதனை பார்வையிட வேண்டும் என பெரியபரந்தன் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டதனையடுத்து 16 பயனாளிகளும் தங்களுடைய நகைகளையும் வட்டிக்கும் கடனை பெற்றும் வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப பணிகளை ஆரம்பித்தவர்களுக்கு பேரிடியாக உடனடியாக வேலைகளை நிறுத்துங்கள் இக் காணிகள் அனைத்தும் வயற் காணிகள் எனவும் இதில் நிரந்தர வீடு கட்ட முடியாது என்று கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான காணிகளில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் கடந்த காலத்தில் நாட்டில் நடந்த யுத்தத்தில் சொத்துக்கள் உடமைகள், என்பவற்றை இழந்து மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களாகும்.. இவர்களில் சிலர் 1958 ஆம் ஆண்டிலிருந்து பரம்பரையாக இக் காணியிலேயே குடியிருந்து வருபவர்களும்,சிலர் 1991 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக குடியிருந்தும் வருபவர்களாகும். இவர்கள் இதுவரை காலமும் தற்காலிக கொட்டகைகளிலேயே வாழ்ந்து வருவதுடன் அரரசினால் வழங்கப்படும் நிரந்தர வீடு எமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருபவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் எமது கிராமத்தில் இதே வயல் நிலங்களில் வாழ்ந்த சுமார் 200 வரையான குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்று வீடுகளையும் முழுமையாக அமைத்து முடித்துள்ளனர். எனவே இதன் போது நடைமுறைக்கு வராத சட்டம் இந்த 16 குடும்பங்களுக்கு மாத்திரம் எவ்வாறு வந்தது? இதேபோன்று வேறு கிராமங்களிலும் இதேபோன்று நிலங்களில் வாழ்கின்ற மக்கள் தற்போது வீட்டுதிட்டங்களைபெற்று வீடுகளை அமைத்து வருகின்றனர். ஏற்கனவே வயல் நிலங்களில் வீடுகள் வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் படங்கள், தற்போது வேறு கிராமத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு வரும் படம் தற்போது தெரிவுசெய்யப்பட்டோரினால் அத்திவாரம் வெட்டப்பட்ட படங்கள் இணைக்கப்படடுள்ளன.
மீள்குடியேற்ற மக்களின் நலன்களிலும் அவர்களின் வீட்டுத்திட்ட விடயத்திலும் மிகவும் கரிசனையோடு செயற்பட்டு வரும் தாங்கள் எமது கிராம மக்களின் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டத்தினை தாமதிக்காது வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனா்.
கடிதத்தின் பிரதி மாவட்ட அரச அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.