குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையினால் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அது தொடர்பிலான கூடுதல் முனைப்பினை இலங்கை காண்பிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம், சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையை கண்டறிதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் இலங்கைக்கு தொழில்நுட்ப சார் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை சட்டங்கள் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமானது எனவும், அதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் மன்னிச்சபை கோரியுள்ளது.