கிளிநொச்சி மாவட்டத்திலே நெல் உலர விடும் தளங்கள் போதியளவில் இல்லாததன் காரணமாக விவசாயிகள் தமது நெல்லினை வீதியில் உலர விடுகின்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.
கிளிநொச்சியில் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கை அறுவடை மேற்கொள்ளப்படும் நிலையில் விவசாயிகள் வீதியில் நெல்லினை உலர விடுகின்ற நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.
இதன் காரணமாக வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் உருவாகி இருப்பதாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களில் நெல் உலர விடும் தளங்களை குறைந்தது கமக்கார அமைப்புகளுக்கு மூன்று என்ற வகையிலாவது அமைத்துத் தாருங்கள் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
சிறுபோக காலத்தில் குறைந்தளவு நெல்லினையே உற்பத்தி செய்யும் விவசாயிகள் நெருக்கடி நிலைமையினை எதிர்கொள்ளும் நிலையில் காலபோகத்தில் அதுவும் மழை வீழ்ச்சி இடம் பெறும் காலத்தில் நெல்லினை உலர விட முடியாத நிலையில் பச்சை நெல்லாகவே விற்பனை செய்கின்ற அவலம் காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய மாவட்டம் என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளுக்கான முக்கியமான தேவைகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே பாரிய நெருக்கடியினை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். எனவே மாவட்டத்தில் கூடுதலான நெல் உலர விடும் தளங்களை அமைத்துத் தருமாறு தொடர்ச்சியாக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.