சுதந்திரம் – திவினோதினி
தலையிழந்த முகமாலையின் மொட்டைப் பனைமரத்தைப்போல
மூளியாகித் தவிக்கிறது மனது
அலையடங்கிய ஆனையிறவின் வற்றுக்கடலாய்
அடங்கிக்கொள்கின்றன வார்த்தைகள்
பூனகரியின் சங்குப்பிட்டிப் பாலத்தடியில் மோதிவரும்
உப்புக்காற்றாய்
மனதரித்துச் செல்லும் நினைவுகளால்
வார்த்தைகள் சிக்கிக்கொள்கின்றன
உங்களைச் சுமந்துவரும் தீராத கனவுகள் தொடும்
இரவுகள் தொடர்கின்றன
அவ் ஒவ்வொரு கனவுகளையும் இறுகத்தழுவி
இதயம் உடைகிறோம்
வார்த்தைகள் முடக்கி வாழ்ந்து தொலைத்ததற்காய்
கண்ணீர் வடிக்கிறோம்
வார்த்தைகள் அற்றவர்களாய் வாழப்பழகியதற்காய்
கண்ணீர் வடிக்கிறோம்
நாங்கள் வார்த்தைகள் அற்றவர்கள்தான்
ஆம் பலபொழுதுகளில் நாங்கள்
வார்த்தைகளற்ற பிணங்களாயிருந்தோம்
பேசுவதைவிட மௌனம் மேலென்று
தெரிந்த பொழுதுகளில்
நாங்கள் வார்த்தைகள் அற்றவர்களாய் மௌனித்திருந்தோம்
என் அண்ணன் கடத்தப்பட்டபோதும்
என் தம்பி காணாமல் ஆக்கப்பட்டபோதும்
என் நண்பியின் மானம் பறிக்கப்பட்டபோதும்
நீள் துப்பாக்கி முனைகளுக்கு அஞ்சியவர்களாக
நாங்கள் வார்த்தைகளை ஒழித்து வைத்திருந்தோம்
செம்மணியில் புதைகுழிகள் தோண்டப்பட்டபோதும்
முள்ளிவாய்க்காலில் புதைகுழிகள் மூடப்பட்டபோதும்
திருக்கேதீச்சரத்தில் புதுக்கதைகள் புனையப்பட்டபோதும்
முட்கம்பிகளுக்கு அஞ்சியவர்களாக
நாங்கள் வார்த்தைகளற்றவர்களாய்
வாழ்ந்து கொண்டிருந்தோம்
இன்று சுதந்திரம் சமத்துவம் சமவுரிமை பற்றியெல்லாம் நீங்கள்
முழங்கும்போது
வார்த்தைகளைத் தொலைத்தவர்களாய்
தொலைத்த எங்கள் வார்த்தைகளைத் தேடி
அலைந்து கொண்டிருக்கிறோம்.