நன்றி – ரொய்ட்டர் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
ஐரோப்பிய ஓன்றிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இடையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானியாவை விவாகரத்து செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையில் உள்ள மாறுபட்ட கருத்துகள் குறித்து தெரியவரலாம்.
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகளில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
லண்டன் , ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து விலகிய பின்னர் என்ன நடைபெறவேண்டும் என்பது குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகின்றது. ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் பிரித்தானியா எவ்வாறு வெளியேறுவது எனவும் நிதிவிடயங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றன.
இதன் காரணமாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் அதில் கலந்து கொள்ளும் அதிகாரிகளிற்கு சவால் மிகுந்தவையாக அமையப்போகின்றன.
ஐரோப்பிய ஓன்றியத்தின் ஏனைய 27 நாடுகளும் பிரித்தானியாவில் வாழும் தங்களது பிரஜைகளின் உரிமைகள் மற்றும் அயர்லாந்து எல்லையின் எதிர்காலம் போன்ற விடயங்களிற்கு தீர்வை கண்டபின்னரே பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
இந்த விவகாரங்கள் குறித்த பேச்சுக்களில் வெற்றி ஏற்பட்டால் பிரித்தானியாவுடனான எதிர்கால உறவு குறித்து கவனம் செலுத்தலாம் எனவும் அவை கருதுகின்றன. இதேவேளை பேச்சுவார்த்தைகளிற்கான காலம் குறைவாக காணப்படுகின்றது. யூன் மாதத்தில் ஆரம்பமான பேச்சுக்கள் 2018 மார்ச் மாதத்திற்கு முன்னர் முடிவடையவேண்டும். பேச்சுவார்த்தைகள் இந்த காலப்பகுதிக்குள் முடிவடையாவிட்டால் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம்.
எதிர்வரும் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள பேச்சுக்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஓன்றிய இராஜதந்திரியொருவர் பிரித்தானியா முதலில் தீர்வு காணவேண்டிய விடயங்களிற்கு பதில் எதிர்கால உறவுகள் குறித்தே அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
பல விடயங்கள் குறித்து பிரித்தானிய தரப்பிடமிருந்து தெளிவான பதில்கள் இல்லை எனவும் குறிப்பாக நிதி விடயங்கள் குறித்து தெளிவான பதில்கள் இல்லை எனவும் அவர் தெரிவி;க்கின்றார்.
இதன் காரணமாக ஓக்டோபர் மாதத்திற்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
பிரதமர் தெரேசா மேயின் இடைத்தேர்தல் பேச்சுக்களை தாமதப்படுத்தியுள்ளதுடன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஓன்றியம் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்த விரும்புகின்றது.
இந்த சுற்றுப்பேச்சுக்களில் நாங்கள் எதிர்காலம் குறித்து பேசமாட்டோம் எனவும் பிரித்தானியா வெளியேறுவது குறித்தே நாங்கள் பேச விரும்புகின்றோம் எனவும் ஐரோப்பிய ஓன்றிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விவகாரத்திற்கான கட்டணம் குறித்தே இரு தரப்பும் கடுமையான நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. ஐரோப்பிய ஓன்றியம் லண்டனிடமிருந்து 60 பில்லியன் யூரோக்களை கோரியுள்ளது.எனினும் இது பெருந்தொகை என லண்டன் நிராகரித்துள்ளது.
கொடுக்கவேண்டியதற்கு அப்பால் சிறிதும் மேலதிகமாக கொடுக்கமாட்டோம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.